தி.மு.க., வேட்பாளரின் பூத்தில் அண்ணாமலைக்கு அதிக ஓட்டு!
தி.மு.க., வேட்பாளரின் பூத்தில் அண்ணாமலைக்கு அதிக ஓட்டு!
தி.மு.க., வேட்பாளரின் பூத்தில் அண்ணாமலைக்கு அதிக ஓட்டு!
ADDED : ஜூன் 06, 2024 12:59 AM
கோவை:கோவை லோக்சபா தொகுதியில், முக்கியமான இரண்டு ஓட்டுச்சாவடிகளில், தி.மு.க., வேட்பாளரை விட, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அதிகமான ஓட்டு வாங்கியிருப்பது, தி.மு.க.,வினர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை லோக்சபா தொகுதியில், 1.18 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். 4.50 லட்சம் ஓட்டுகள் பெற்று, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இரண்டாமிடம் வந்திருக்கிறார். இருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில், தி.மு.க.,வை விட பா.ஜ.,வுக்கு, அதிகமான ஓட்டு விழுந்திருக்கிறது.
ஆறு சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுகள் விபரத்தை, மாவட்ட தேர்தல் பிரிவினர் வெளியிட்டனர்.
அதை ஆய்வு செய்தபோது, அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார் வசிக்கும் கணபதி பகுதியில், அவர் ஓட்டளிக்கும், 270 எண்ணுள்ள ஓட்டுச்சாவடியில், அண்ணாமலை, 309 ஓட்டுகள் பெற்றிருக்கிறார். தி.மு.க., 229 ஓட்டுகளே பெற்றிருக்கிறது; 80 ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கூடுதலாக பதிவாகி இருக்கிறது.
தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளரான கார்த்திக் வசிக்கும் பீளமேடு அண்ணா நகர் பகுதியில், அவர் ஓட்டளிக்கும், 100ம் எண்ணுள்ள ஓட்டுச்சாவடியில், அண்ணாமலைக்கு, 363 ஓட்டு பதிவாகியிருக்கிறது. தி.மு.க.,வுக்கு, 192 ஓட்டுகளே விழுந்திருக்கிறது. 171 ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு அதிகமாக கிடைத்திருக்கிறது.
இதேபோல், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஏராளமான ஓட்டுச்சாவடிகளில், அண்ணாமலையே அதிகமான ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்; தி.மு.க., வேட்பாளர் இரண்டாமிடம் சென்றிருக்கிறார்.
கூட்டணி பலமிக்க இடங்களிலும், கிராமப்புறங்களிலும் அதிகப்படியான ஓட்டுகள் பெற்றதால், தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது.