தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்துவரும் அதிமுக.,வின் செல்வாக்கு
தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்துவரும் அதிமுக.,வின் செல்வாக்கு
தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்துவரும் அதிமுக.,வின் செல்வாக்கு
ADDED : ஜூன் 05, 2024 01:09 PM

சென்னை: கடந்த 2014ல் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக.,வின் செல்வாக்கு சரிந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று (ஜூன் 4) வெளியான நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்றியுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி மற்றும் பா.ஜ., கூட்டணி தோல்வியடைந்தது. இதில் அதிமுக.,வின் செல்வாக்கு படிப்படியாக சரிவை சந்தித்து வருவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 37 இடங்களை வென்றது. அந்த தேர்தலில் அதிமுக.,வின் ஓட்டு சதவீதம் 44.92 ஆக அதிகரித்திருந்தது. அப்படி இருந்த அதிமுக.,வின் நிலைமை ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சரியத் துவங்கியது.
2019ல் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இபிஎஸ் ஆகிய இரட்டை தலைமையுடன் லோக்சபா தேர்தலை அதிமுக சந்தித்தது. பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. ஓட்டு சதவீதமும் 19.39 சதவீதமாக குறைந்தது.
தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வெளியேற்றிவிட்டு தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது இபிஎஸ் தலைமையிலான அதிமுக. அதில் 32 தொகுதிகளில் அதிமுக வேட்பாளரும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலும் என 34 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. இவை அனைத்திலும் தோல்வியடைந்தது. ஆனால் முந்தைய லோக்சபா தேர்தலை விட ஓட்டு சதவீதம் சற்றே அதிகரித்து 20.46 ஆக இருக்கிறது.
சட்டசபை தேர்தல்
அதேபோல், சட்டசபை தேர்தல்களை பொறுத்தவரை 2016ல் ஜெயலலிதா தலைமையில் தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் உட்பட மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டது. அதில் 136 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது மட்டுமல்லாமல், அதிமுக மட்டும் 40.88 சதவீத ஓட்டுகளையும் பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 179, கூட்டணி கட்சிகள் 12 என 191 தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் போட்டியிட்டது. அதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றன. ஓட்டு சதவீதமும் 33.29 ஆக குறைந்தது.
இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது அக்கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.