மினி பஸ் திட்டத்தால் 1 கோடி பேர் பயன்: தமிழக அரசு தகவல்
மினி பஸ் திட்டத்தால் 1 கோடி பேர் பயன்: தமிழக அரசு தகவல்
மினி பஸ் திட்டத்தால் 1 கோடி பேர் பயன்: தமிழக அரசு தகவல்
ADDED : ஜூன் 22, 2025 01:24 AM

சென்னை:'புதிதாக துவங்கியுள்ள மினி பஸ் திட்டத்தால், 90,000 கிராமப்புறங்களில் வசிக்கும் ஒரு கோடி பேர் பயனடைவர்' என, தமிழக அரசு தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
குக்கிராம பகுதி மக்களுக்கும் பஸ் வசதி கிடைக்க, மினி பஸ் திட்டம், 1997ல் துவக்கப்பட்டது. பின், புதிய விரிவான மினி பஸ் திட்டம், கடந்த ஆண்டு ஜனவரி, 23ம் தேதி அறிவிக்கப்பட்டது.
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, கடந்த ஏப்., 28ம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, 25 கி.மீ., துாரம் மினி பஸ் இயக்கப்படும் எனவும், முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் செல்ல ஏதுவாக, மேலும் ஒரு கிலோ மீட்டர் துாரம் வரை மினி பஸ்களை இயக்கவும் வழிவகை செய்யப்பட்டது.
இதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள, 90,000 கிராமப்புறங்களில் வசிக்கும், 1 கோடி மக்கள் பயன் பெறத்தக்க வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், கடந்த 16ம் தேதி தஞ்சாவூரில் துவக்கி வைத்தார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் மினி பஸ் சேவை துவங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


