செந்தில் பாலாஜி 'சப்போர்ட்' இல்லாமல் வெற்றி ஜோதிமணி ஆதரவாளர்கள் அலப்பறை
செந்தில் பாலாஜி 'சப்போர்ட்' இல்லாமல் வெற்றி ஜோதிமணி ஆதரவாளர்கள் அலப்பறை
செந்தில் பாலாஜி 'சப்போர்ட்' இல்லாமல் வெற்றி ஜோதிமணி ஆதரவாளர்கள் அலப்பறை
ADDED : ஜூன் 06, 2024 10:41 PM
கரூர்:செந்தில்பாலாஜி 'சப்போர்ட்' இல்லாமல், ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார் என, அவரது ஆதரவாளர்கள் பதிவால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த, 2019 கரூர் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் ஜோதிமணி, 4.20 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை முன்னாள் அமைச்சரும், தி.மு.க., மாவட்ட செயலருமான செந்தில்பாலாஜி சாத்தியப்படுத்தினார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, செந்தில்பாலாஜி-ஜோதிமணி இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் இந்த லோக்சபா தேர்தலில், ஜோதிமணிக்கு சீட் கொடுக்க, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்பாளர் ஜோதிமணி அறிவிக்கப்பட்ட பின், தொடக்கத்தில், தி.மு.க.,வினர் வேலை செய்யவில்லை. பின், தலைமை எச்சரிக்கையால், தி.மு.க., வேண்டாத வெறுப்பாக தேர்தல் பணிகளை செய்தனர். 1.66 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜோதிமணி மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த தேர்தலை விட, 2.54 லட்சம் ஓட்டுக்கள் குறைந்துள்ளது.
இந்நிலையில், எம்.பி.,ஜோதிமணி, தன் 'எக்ஸ்' தளத்தில் வெற்றிக்கு நன்றி தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார்.
அதில், 'நமக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய் பிரசாரங்களை முறியடித்து, மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை பரிசளித்த, எமது கரூர் லோக்சபா தொகுதி சொந்தங்களின் மகத்தான அன்பிற்கும், ஆதரவிற்கும் தலை வணங்குகிறேன். மகத்தான வெற்றியை பரிசளித்த எமது மக்களுக்கும், இந்த வெற்றிக்காக அயராது அர்ப்பணிப்போடு உழைத்த இந்தியா கூட்டணியின் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து அதே அர்ப்பணிப்போடும், நேர்மையோடும் வளர்ச்சி பணிகளை முன்னெடுப்போம். சிறப்பான எதிர்காலத்தை நம் பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்' என, குறிபிட்டுள்ளார்.
காங்.,-தி.மு.க., தலைவர்களின் பெயரை பதிவிட்டால், செந்தில்பாலாஜியை குறிப்பிட வேண்டும் என்பதற்காக, அனைத்து தலைவர்கள் பெயர்களை பதிவிடவில்லை. அந்த ட்விட்டின் கீழ், அவரது ஆதரவாளர்கள் செந்தில்பாலஜிக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.
அதில், 'செந்தில்பாலாஜி 'சப்போர்ட்' இல்லாமல் ஜோதிமணியின் உழைப்பிற்காக கிடைத்த வெற்றி எனவும், நீ செந்தில்பாலாஜியை விட பெரிய ஆள். வாழ்த்துக்கள் அக்கா, தி.மு.க.,விடமிருந்து வெளியே வாருங்கள். மதிப்பு மரியாதை முக்கியம்' என, பதிவிட்டு வருகின்றனர்.
செந்தில்பாலாஜி ஆதரவில் ஜெயித்து விட்டு, ஜோதிமணி ஆதரவாளர்கள், மாற்றி பதிவிட்டு வருவது தி.மு.க.,வினர் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.