Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/ கல்வி கடனுக்காக அதிக வட்டி வசூலித்த இந்தியன் வங்கிக்கு ரூ.15.10 லட்சம் அபராதம்

கல்வி கடனுக்காக அதிக வட்டி வசூலித்த இந்தியன் வங்கிக்கு ரூ.15.10 லட்சம் அபராதம்

கல்வி கடனுக்காக அதிக வட்டி வசூலித்த இந்தியன் வங்கிக்கு ரூ.15.10 லட்சம் அபராதம்

கல்வி கடனுக்காக அதிக வட்டி வசூலித்த இந்தியன் வங்கிக்கு ரூ.15.10 லட்சம் அபராதம்

ADDED : ஜூன் 06, 2024 10:40 PM


Google News
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், குலோத்துங்கநல்லுாரை சேர்ந்தவர் மதன், 32. அரியலுார் ஆயுதப்படை போலீசாக உள்ள இவர், கடல்சார் பொறியியல் படிக்க, தன் சொத்தை அடமானம் வைத்து, 2011--2014 காலக்கட்டத்தில், மீன்சுருட்டி இந்தியன் வங்கியில், 8.40 லட்சம் ரூபாய் கல்வி கடன் பெற்றார். 2017ல் இவர் போலீசில் பணியில் சேர்ந்தார். 2022ல், நிலுவைத்தொகை 18.98 லட்ச ரூபாயை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என இவருக்கு, இந்தியன் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இவர், சென்னை கடன் வசூல் தீர்ப்பாயத்தை அணுகினார். அங்கு 20 சதவீத தொகை செலுத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி, 3.87 லட்சம் ரூபாயை அவர் வங்கியில் செலுத்தினார். ஆனால், அரியலுார் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது இந்தியன் வங்கி, 18.28 லட்சம் ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே, நீதிமன்ற உத்தரவு இல்லாமல், அவருக்கு சொந்தமான, வங்கியில் அடமானமாக இருந்த சொத்தை ஏலம் விடப் போவதாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அடமானச் சொத்து ஏலத்தில் போய்விடுமே என்ற பயத்தில், அந்த நபர், நான்கு தவணைகளில் 19.41 லட்சம் ரூபாயை செலுத்தி அடமானச் சொத்தை மீட்டார்.

பின், 2024 ஜனவரியில், இந்தியன் வங்கிக்கு எதிராக அரியலுார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.

அதில், கல்விக்கடனை வசூலிப்பதில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காமல், கல்விக்கடனை திரும்ப செலுத்தும் காலத்தைத் திருத்தியமைத்து அளவுக்கு அதிகமாக 15 சதவீத வட்டி வசூலித்துள்ளனர். எனவே, சட்டத்திற்குப் புறம்பாக கடன் தொகையை வசூலித்த குற்றத்திற்காக இந்தியன் வங்கிக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயை, இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us