மதுரையில் ஏன் கட்சிக்கு மூன்றாமிடம்? செல்லுார் ராஜுவிடம் பழனிசாமி கேள்வி..
மதுரையில் ஏன் கட்சிக்கு மூன்றாமிடம்? செல்லுார் ராஜுவிடம் பழனிசாமி கேள்வி..
மதுரையில் ஏன் கட்சிக்கு மூன்றாமிடம்? செல்லுார் ராஜுவிடம் பழனிசாமி கேள்வி..
ADDED : ஜூலை 14, 2024 01:42 AM

சென்னை: 'உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்' என, கட்சியினருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, சட்டசபை தொகுதிவாரியாக, அ.தி.மு.க.,வில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, சிதம்பரம், மதுரை, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளுக்கான கூட்டம் நடந்தது.
சிதம்பரம் தொகுதி கூட்டத்தில், சில நிர்வாகிகள் பேசும்போது, 'பா.ம.க.,வுடன் இனி கூட்டணி வேண்டாம். அக்கட்சியால் நமக்கு பலனில்லை.
தயாராக வேண்டும்
அவர்களை தவிர்த்து, நம் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.
அதற்கு பதில் அளித்த பழனிசாமி, 'வரும் சட்டசபை தேர்தலில், பலமான கூட்டணி அமைப்போம். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக களப்பணி ஆற்ற வேண்டும்.
வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு, அனைவரும் தயாராக வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
மதுரை தொகுதிக்கான கூட்டத்தில், மாவட்டச் செயலர்கள் செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா, வேட்பாளர் சரவணன் ஆகியோர் பேசி உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவிடம், 'அ.தி.மு.க., ஆட்சியில் மதுரை மாவட்டத்திற்கு மட்டும், 8,000 கோடி ரூபாய்க்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
அப்படி இருந்தும், தேர்தலில் நாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். சாதனைகளைக் கூறி ஏன் ஓட்டுகளை பெறவில்லை' என, பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கூடுதல் சாதகம்
அவர் பதில் அளிக்க, செல்லுார் ராஜுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. புகார் சொன்ன பழனிசாமியே, 'சரி சரி, நடந்ததை மறந்து, அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறப் பாருங்கள்' எனக் கூறி, அடுத்த கருத்துக்குப் போய் இருக்கிறார்.
இதனால், செல்லுார் ராஜூ செய்வதறியாது திகைத்துள்ளார்.
கூட்டத்தில் சிலர் பேசுகையில், 'இரண்டு சட்டசபை தொகுதிக்கு, ஒரு மாவட்டச் செயலரை நியமிக்க வேண்டும். 'பூத்' கமிட்டியை பலப்படுத்த வேண்டும்.
பா.ஜ., கூட்டணியால் பாதகம் கொஞ்சம் இருந்தாலும், சாதகம் கூடுதலாகவே உள்ளது. கூட்டணி இல்லாததால், அனைத்து தரப்பு மக்களையும் அணுக முடிந்தது. அதேநேரம் கூட்டணி இருந்திருந்தால், 15 தொகுதிகள் வரை நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம்' என தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதில் அளித்த பழனிசாமி, 'நடந்து முடிந்தது லோக்சபா தேர்தல் என்பதை கட்சியினர் அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடிக்காக தேர்தலில் மக்கள் ஓட்டளித்தனர்.
சட்டசபை தேர்தலில் அப்படி ஓட்டளிக்க வாய்ப்பில்லை. எனவே, கடந்த தேர்தலில் கிடைத்த தோல்விக்காக யாரும் வருந்த வேண்டாம். வரும் சட்ட சபை தேர்தலில் நமக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
வெற்றி உறுதி
லோக்சபா தேர்தலில் தோல்வி என்றாலும், நம்முடைய ஓட்டு சதவீதம் அப்படியே உள்ளது. அதனால், வரும் சட்டசபை தேர்தலை நோக்கி இன்னும் வேகமாக கட்சியினர் அனைவரும் பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால், வெற்றி பெறுவது உறுதி.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் துணை இல்லாமல் தான், லோக்சபா தேர்தலில், நமக்கான ஓட்டுகளை குறைவில்லாமல் அப்படியே பெற்றிருக்கிறோம்.
அதனால், கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பளிக்க முடியாது. அப்படியொரு சிந்தனை நம் கட்சியினருக்கு இருந்தால், முதலில் அதில் இருந்து மீண்டுவர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.