Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஆம்ஸ்ட்ராங் படுகொலை பழிக்கு பழியா? ஆற்காடு சுரே ஷ் பிறந்த நாளில் நிறைவேற்றப்பட்ட சபதம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பழிக்கு பழியா? ஆற்காடு சுரே ஷ் பிறந்த நாளில் நிறைவேற்றப்பட்ட சபதம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பழிக்கு பழியா? ஆற்காடு சுரே ஷ் பிறந்த நாளில் நிறைவேற்றப்பட்ட சபதம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பழிக்கு பழியா? ஆற்காடு சுரே ஷ் பிறந்த நாளில் நிறைவேற்றப்பட்ட சபதம்

ADDED : ஜூலை 07, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 52, நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ரவுடி 'ஆற்காடு' சுரேஷின் தம்பி பாலு உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட, 'ஆற்காடு' சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும், ஆற்காடு சுரேஷ் பிறந்த நாள் அல்லது இறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல வேண்டும் என, கொலையாளிகள் முன்னரே தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் என்பதால், அன்றைய தினத்தை கொலை செய்வதற்கு தேர்வு செய்த ஆற்காடு பாலு, திட்டமிட்டபடி ஆம்ஸ்ட்ராங்கை கொன்று விட்டு, கத்தியோடு தப்பியோடிஉள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்காடு சுரேஷ் படத்தை வைத்து பூஜை செய்துள்ளார். அப்போது, ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதில் வெளிப்பட்ட ரத்தக் கறைகளுடன் கூடிய கத்தியையும் வைத்து வழிபட்டுள்ளார்.

சபதம் நிறைவேறியதைத் தொடர்ந்து, மேற்கொண்டு எங்கும் தப்பியோடாமல் சென்னை, அண்ணாநகர் போலீஸ் துணைக் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, கொலையாளிகளுடன் பாலு சரண்டர் ஆகி இருக்கிறார் என, போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

சாலை மறியல்


ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள், சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரம்பூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே, அவர்களின் கோரிக்கையாக இருந்தது. தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கிடையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 7:45 மணி முதல் 9:45 மணி வரை பிரேத பரிசோதனை நடந்தது.

பிரேத பரிசோதனை முடிந்த பின், ஆம்ஸ்ட்ராங் உடலை, அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றனர். அதனால் உடலை ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் தடுத்தனர்.

மூடப்பட்ட கடைகள்


இதனால், போலீசாருக்கும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்று மாலை, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, இன்று சென்னை வந்து, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

'உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின், காங்., - எம்.பி., ராகுல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன், வி.சி., தலைவர் திருமாவளவன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோர், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை பெரம்பூரில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

பெரம்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று, இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. பெரம்பூரில் அவருக்கு சொந்தமான நிலத்தில், அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

'ஸ்கெட்ச்' போட்டகொலையாளிகள்@

@
ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப்பிரிவு போலீசார், பெரம்பூர் போலீசாரிடம் மூன்று முறை எச்சரித்திருந்தனர்.இதை போலீசாரும் ஆம்ஸ்ட்ராங்குக்கு தெரியப்படுத்தியதாகவும், ஆனால், ஆம்ஸ்ட்ராங் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததாலேயே, கொலை சம்பவம் நடந்து விட்டது எனவும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
இக்கொலைக்கு, பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரும், சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை திட்டம் போட்டுக் கொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது. பெரம்பூரில் புதிதாக வீடு கட்டி வந்த ஆம்ஸ்ட்ராங், அங்கே தினமும் இரவு தன் ஆதரவாளர்களை சந்தித்துப் பேசுவது வழக்கம். இதை, கடந்த ஒரு வாரமாக நோட்டமிட்ட திருமலை, ஆம்ஸ்ட்ராங் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருவதில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி, அதை கொலையாளிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.
இதன்பின்பே, கொலையாளிகள் தங்கள் திட்டப்படி ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுள்ளனர். ஒருவேளை, ஆம்ஸ்ட்ராங்கிடம் கைத்துப்பாக்கி இருந்திருந்தால், கொலையாளிகளை அவரும் சுட்டிருக்கக் கூடும்.மேலும் ஆம்ஸ்ட்ராங், குத்துச்சண்டை பயிற்சி பெற்றவர் என்பதால் அவரை முன்னே சென்று தாக்கி கொலை செய்ய முடியாது என்பதால், ஆம்ஸ்ட்ராங்கின் பின்னால் சென்று தலை மற்றும் கழுத்தில், ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர்.இதில், ஆம்ஸ்ட்ராங் நிலைகுலைந்து வெட்டுப்பட்ட இடத்திலேயே சரிந்துள்ளார். அதன்பின், ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பி உள்ளனர்.ஆயுதம் கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொல்லும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி கொல்ல முடியாத பட்சத்தில், நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லவும் திட்டம் வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலையாளிகள் தப்பி ஓடும்போது, கொண்டு வந்த வெடிகுண்டுகளை சம்பவ இடத்திலேயே போட்டு விட்டு ஓடியுள்ளனர்.வடசென்னை கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் கூறுகையில், “கொலை நடந்த நான்கு மணி நேரத்தில் எட்டு பேர் பிடிபட்டுள்ளனர். கொலையில் கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது,” என்றார்.



கடந்த 2023 ஆகஸ்ட் 18ல், பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார். அதற்குப் பழி தீர்க்கவே இப்படுகொலை நடந்துள்ளதாக, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த, ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட, எட்டு பேரும் வழக்கறிஞர்கள் வாயிலாக, கொலை நடந்த இரவே அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் விசாரணைக்காக புளியந்தோப்பு துணை ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதில், 'பொன்னை' பாலு, 39, திருமலை, 45, செல்வராஜ், 48, சந்தோஷ், 22, ராமு, 38, அருள், 33, மணிவண்ணன், 25, திருவேங்கடம், 33, ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில், 'பொன்னை' பாலு, கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்த திருமலை ஆகியோர் மீது, 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.



காவல்துறைக்கு சவால்!


ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் அல்ல. உண்மைக் குற்றவாளிகள், கொலைக்கு திட்டம் போட்டுக் கொடுத்தவர்களை, காவல் துறை கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தலித் தலைவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து வருகிறது. தென் மாவட்டங்களில் நடந்து வந்த தாக்குதல், தற்போது மாநிலத்தின் தலைநகர் வரை வந்துள்ளது. கூலிப்படை வாயிலாக கொலை திட்டம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. 'வழக்குப்பதிவு செய்தோம்; புலன் விசாரணை நடத்தினோம்' என்றில்லாமல் கூலிப்படை கலாசாரம் பெருக என்ன காரணம் என்பதையும் அரசு ஆராய்ந்து, அதை தடுக்க வேண்டும்.
ஓர் அரசியல் கட்சித் தலைவரையே, இவ்வளவு இலகுவாக படுகொலை செய்துள்ளனர் என்றால், இது காவல் துறைக்கு விடப்பட்ட சவால் தான். இதை சவாலாக ஏற்றுக் கொண்டு, தமிழக காவல் துறை சட்டம் - ஒழுங்கை முழுமையாக காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us