Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஆரம்பத்திலேயே தள்ளாடும் 'உரிமைகள் திட்டம்'; முறையாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு

ஆரம்பத்திலேயே தள்ளாடும் 'உரிமைகள் திட்டம்'; முறையாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு

ஆரம்பத்திலேயே தள்ளாடும் 'உரிமைகள் திட்டம்'; முறையாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு

ஆரம்பத்திலேயே தள்ளாடும் 'உரிமைகள் திட்டம்'; முறையாக சம்பளமின்றி ஊழியர்கள் தவிப்பு

UPDATED : ஜூன் 12, 2024 03:25 AMADDED : ஜூன் 12, 2024 12:51 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும், 'உரிமைகள்' திட்டத்தின் கீழ், ஐந்து மாவட்டங்களுக்கு வாங்கப்பட்ட, ஹோம் தியேட்டருடன் கூடிய, 'டிவி'யை பயன்படுத்த, அறை எதுவும் இல்லாததால், அவை பிரிக்கப்படாமலே முடங்கியுள்ளன.

ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம், இன்னும் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

முடிவு


மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக, 2022 டிசம்பரில், 'உரிமைகள் திட்டம்' துவக்கப்பட்டது.

இத்திட்டம் உலக வங்கி உதவியுடன், 1,773.87 கோடி ரூபாயில், தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக, சென்னை, திருச்சி, தர்மபுரி, கடலுார், தென்காசி மாவட்டங்களில், திட்டத்தை செயல்படுத்துவது, 2023 - 24ல், மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவது என முடிவானது.

அதன்படி, ஐந்து மாவட்டங்களில் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட அளவில் ஒப்பந்த அடிப்படையில், ஆலோசகர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட்டார மற்றும் கிராம அளவில், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூக நலத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து, திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.

வழிகாட்டு நெறிமுறைகள்


ஒருங்கிணைந்த சேவை மையம் உருவாக்குதல், பணியாளர்கள் ஊதியம், பயிற்சி, கணக்கெடுப்பு, நடமாடும் சேவை மையம் அமைத்தல் போன்றவற்றுக்காக, 2022 -23ல், தமிழக அரசு, 17 கோடி ரூபாய் ஒதுக்கியது.

இத்திட்டத்தில், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இத்திட்டம், 2022 டிச.,13 முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக, உலக வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், திட்டம் இன்னும் நிர்வாக அளவிலேயே உள்ளது.

திட்டத்தில் பணியாற்றுவதற்காக சேர்க்கப்பட்ட, மாவட்ட அளவிலான ஒப்பந்தப் பணியாளர்களுக்கு, முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஏப்ரல் மாத சம்பளம், இரண்டு நாட்களுக்கு முன்தான் வந்துள்ளது. மே மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.

அதிர்ச்சி


திட்டம் செயல்படுத்தப்படும் ஐந்து மாவட்டங்களுக்கு, ஹோம் தியேட்டருடன், 64 அங்குலம் அகலம் கொண்ட, 'டிவி'கள் தலா மூன்று செட்டுகள் வாங்கப்பட்டன. ஓரிட சேவை மையங்களில் பயன்படுத்துவதற்காக, இவை வாங்கப்பட்டன. ஆனால், மையங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதனால், ஹோம் தியேட்டர் மற்றும், 'டிவி' பிரிக்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் சம்பளம் முறையாக கிடைக்குமா என, காத்திருக்கின்றனர். திட்டம் துவக்கத்திலேயே தள்ளாடுவது, மாற்றுத்திறனாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் தலையிட்டு, ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதுடன், திட்டத்தை செயல்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அவர்களின் விருப்பமாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us