வி.ஐ.பி., பாதுகாப்பு பணியில் இருந்து என்.எஸ்.ஜி.,யை திரும்ப பெற முடிவு
வி.ஐ.பி., பாதுகாப்பு பணியில் இருந்து என்.எஸ்.ஜி.,யை திரும்ப பெற முடிவு
வி.ஐ.பி., பாதுகாப்பு பணியில் இருந்து என்.எஸ்.ஜி.,யை திரும்ப பெற முடிவு
UPDATED : ஜூன் 12, 2024 04:03 AM
ADDED : ஜூன் 12, 2024 01:11 AM

புதுடில்லி, நாட்டில், வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்பு படை, ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ - திபெத் எல்லை படை ஆகியவற்றை திரும்பப் பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோருக்கு, என்.எஸ்.ஜி.,யின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதே போல், பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, மக்கள் ஜனநாயகக் கட்சி மெஹபூபா முப்தி உள்ளிட்டோருக்கு, ஐ.டி.பி.பி.,யின் கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
இந்நிலையில், வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்து, என்.எஸ்.ஜி., - ஐ.டி.பி.பி., ஆகியவற்றை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வி.ஐ.பி., பாதுகாப்பு பணியில் இருந்து, என்.எஸ்.ஜி.,யை திரும்பப் பெற வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட உள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தலை தடுக்கவே, என்.எஸ்.ஜி., உருவாக்கப்பட்டது. வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு என்பது, அந்தப் படைக்கு கூடுதல் சுமையாக பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் இருந்து, என்.எஸ்.ஜி., விடுவிக்கப்பட உள்ளதால், அந்தப் பொறுப்பு, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வி.ஐ.பி., பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதே போல், ஐ.டி.பி.பி., வசமிருந்த பாதுகாப்பு பணி, சி.ஆர்.பி.எப்., அல்லது சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது.
அதில், முன்னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், முக்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் வி.ஐ.பி., பாதுகாப்பை தொடரலாமா அல்லது திரும்பப் பெறலாமா அல்லது அதிகப்படுத்தலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
வி.ஐ.பி., பாதுகாப்புப் பணியில் இருந்து, என்.எஸ்.ஜி., திரும்பப் பெறப்பட்டவுடன், 450 'கருப்பு பூனை' கமாண்டோக்கள் விடுவிக்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.