மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் திண்டாட்டம்
மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் திண்டாட்டம்
மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் திண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2024 01:41 AM

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அரசு தலைமை மருத்துவமனையில், பாலப்பட்டி, நன்செய் இடையாறு, குப்புச்சிப்பாளையம், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம், அணிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.
இந்த மருத்துவமனை, தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்படுவதால் நாள்தோறும், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். 80 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
எலும்பு முறிவு சிகிச்சை, கண் மருத்துவம், பல் மற்றும் சிறப்பு சிகிச்சை, ரத்த வங்கி, முடநீக்கம், 24 மணி நேர தாய் சேய் நல சிகிச்சை, எக்ஸ்ரே, ஸ்கேன், பால்வினை நோய் சிகிச்சை ஆகிய ஒன்பது பிரிவுகள் பெயரளவுக்கு மட்டும் செயல்படுகின்றன.
இந்நிலையில், நேற்று காலை பொதுமக்கள் சிகிச்சைக்காக, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு, வந்தனர்.
அப்போது பணியில் இருந்த காது, மூக்கு சிகிச்சை டாக்டர் மதிவதனி ஒருவர் மட்டுமே, அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார். இதனால் சிகிச்சை பெற வந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது.
இதுகுறித்து, அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் கேட்டபோது, 'அனைத்து டாக்டர்களும், 'மீட்டிங்' சென்றுள்ளனர்.
இன்று டாக்டர் மதிவதனி மட்டுமே அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார்' என, தெரிவித்தனர். இதனால், '108' அவசரகால ஆம்புலன்சில் வந்த நோயாளிகள், டாக்டர்களுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, தலைமை டாக்டர் ஜெயந்தியிடம் கேட்டபோது, ''நான் உட்பட ஆறு டாக்டர்கள் பணியில் இருந்தோம். அறுவை சிகிச்சைக்காக ஆப்பரேஷன் தியேட்டருக்கு, இரு டாக்டர்கள் சென்றிருந்தனர். 'டாக்டர்கள் பணியில் இல்லை' என்ற புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
''வரும் நாட்களில் அனைத்து டாக்டர்களும் பணியில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்,'' என்றார்.