வீடு, மனைகள் விற்பனையில் ரூ.1,650 கோடி வருவாய் ஈட்ட வீட்டு வசதி வாரியம் இலக்கு
வீடு, மனைகள் விற்பனையில் ரூ.1,650 கோடி வருவாய் ஈட்ட வீட்டு வசதி வாரியம் இலக்கு
வீடு, மனைகள் விற்பனையில் ரூ.1,650 கோடி வருவாய் ஈட்ட வீட்டு வசதி வாரியம் இலக்கு
ADDED : ஜூலை 30, 2024 03:40 AM

சென்னை: நடப்பு நிதியாண்டில் வீடுகள், மனைகள் விற்பனை வாயிலாக, 1,650 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட, வீட்டு வசதி வாரியம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
வாரியம் சார்பில் குடியிருப்பு மற்றும் வணிக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த வீடுகள், மனைகள் வாங்க மக்கள் மத்தியில் கடுமையான போட்டி உள்ளது. இருப்பினும், வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் விற்பனை நடவடிக்கைகளில் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால், தமிழகம் முழுதும், 11,000க்கும் மேற்பட்ட வீடுகள், மனைகள், வணிக மனைகள் விற்பனைக்கு காத்திருக்கின்றன. விற்பனையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, வாரியத்தின் வருவாய் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த, 2022 - 23ம் நிதியாண்டில், 1,362.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், 2023 - 24ல், 814.49 கோடி ரூபாயாக வருவாய் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டு வசதி வாரியத்தில், கடந்த நிதியாண்டில் குடியிருப்புகள், வணிக மனைகள் விற்பனை, வாடகை வாயிலான வருவாய் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
நடப்பு நிதியாண்டில், 1,650 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதற்காக, தயார் நிலையில் உள்ள வீடுகள், மனைகள், வணிக மனைகளை விற்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
குடியேறுவதற்கு தயாராக உள்ள வீடுகள், மனைகள் குறித்த விபரங்களை சமூக வலைதள ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி, விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.