ரேஷன் கடைகளில் மதுபானம், கள் விற்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு
ரேஷன் கடைகளில் மதுபானம், கள் விற்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு
ரேஷன் கடைகளில் மதுபானம், கள் விற்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு
UPDATED : ஜூலை 30, 2024 06:10 AM
ADDED : ஜூலை 30, 2024 04:33 AM

சென்னை: கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மது விற்க அனுமதி கோரியும் அளித்த மனுவை, அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூரை சேர்ந்த முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த 2003 முதல், 'டாஸ்மாக்' நிறுவனம் வாயிலாக மது விற்பனை நடக்கிறது. சில்லரை விலைக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. மொத்த விற்பனையில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடக்கிறது.
மறுபரிசீலனை
இந்தத் தொகை, விற்பனையாளர் முதல் துறையின் அமைச்சர் வரை பங்கிடப்படுவதாக, தகவல் கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான மதுபான தயாரிப்பு நிறுவனங் கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளன. இதனால், குறிப்பிட்ட சில, 'பிராண்ட்' மதுபானங்களை மட்டுமே டாஸ்மாக் நிறுவனம் விற்கிறது.
மதுபானங்களை விட, கள்ளில் ஆல்கஹால் அளவு மிகக்குறைவாக உள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில், எந்த இடையூறும் இன்றி கள் விற்பனை நடக்கிறது.
இதை, ஆரோக்கிய பானமாக கருதுகின்றனர். அரசு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யலாம். கள் விற்பனையை ஒழுங்குபடுத்தலாம்.
எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில் அனைத்து ரக மதுபானங்களும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில், குறைந்த விலையில் மதுபானம் கிடைக்க வேண்டும். கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும்.
ஒவ்வொரு கடைக்கும் வெளியில், அதிக விலையில் மது விற்கவில்லை என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
கள் விற்பனைக்கு தடை விதித்த, 1986ம் ஆண்டிலும், டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபான விற்பனைக்கு அனுமதித்த, 2003ம் ஆண்டிலும் அமல்படுத்திய சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் அமர்வு' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தன் குற்றச்சாட்டுகள் குறித்து, மோசடி வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடும்படி, மனுதாரரான முரளிதரன் கோரினார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், இந்த வழக்கில் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, குற்றச்சாட்டுக் கள் குறித்து அரசு பதில் அளிக்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என, முதல் அமர்வு தெரிவித்தது.
கொள்கை முடிவு
கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்க சில பரிந்துரைகளை மனுதாரர் தெரிவித்திருப்பதாகவும், அரசின் கொள்கை முடிவு என்பதால், அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் முதல் அமர்வு தெரிவித்தது.
ரேஷன் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் மது விற்பனை மற்றும் கள் விற்பனைக்கான தடையை நீக்கக்கோரிய மனுதாரரின் மனுவை, அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும், உத்தரவிட்ட முதல் அமர்வு, விசாரணையை, எட்டு வாரங் களுக்கு தள்ளி வைத்தது.