'சஸ்பெண்ட்' சார் - பதிவாளர் திடீர் தற்கொலை முயற்சி
'சஸ்பெண்ட்' சார் - பதிவாளர் திடீர் தற்கொலை முயற்சி
'சஸ்பெண்ட்' சார் - பதிவாளர் திடீர் தற்கொலை முயற்சி
ADDED : ஜூன் 18, 2024 04:54 AM
சென்னை : போலி ஆவணங்கள் வாயிலாக, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சார் - பதிவாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகேயுள்ளது கன்னிவாக்கம் கிராமம். இங்கு, 'சென்சுரி லெதர்ஸ்' என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 25.91 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 20 ஏக்கர் நிலம் தொடர்பாக எழுந்த பிரச்னைகள் முடிக்கப்பட்டன.
மீதமுள்ள 5.23 ஏக்கர் நிலம் தொடர்பான அசல் ஆவணங்களை உறுதிப்படுத்துவது குறித்து வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும், இந்த நிலம் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
ஆனால், மே மாதம், அந்த நிறுவனம் பொது அதிகாரம் வழங்கி இருப்பது போல போலி ஆவணங்கள் தயாரித்து, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5.23 ஏக்கர் நிலம், ஐந்து பத்திரங்களாக வேறு பெயர்களில், திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனியார் நிறுவனத்தினர், பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், மாவட்ட பதிவாளர், சார் - பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் லஞ்சமாக, 2 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர் விசாரணைக்கு பின், சில தினங்களுக்கு முன், திருப்போரூர் சார் - பதிவாளர் கணேசன், 33 மற்றும், அவரது உதவியாளர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கணேசன், சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், 2வது அவென்யூவில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு, 20க்கும் அதிகமாக மாத்திரையை உட்கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நள்ளிரவு, 12:00 மணியளவில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்கொலை முயற்சி குறித்து, திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.