குழந்தைகளிடம் வேகமாக பரவுது வைரஸ் காய்ச்சல்
குழந்தைகளிடம் வேகமாக பரவுது வைரஸ் காய்ச்சல்
குழந்தைகளிடம் வேகமாக பரவுது வைரஸ் காய்ச்சல்
ADDED : ஜூன் 18, 2024 04:58 AM

சென்னை : பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக, குழந்தைகள் நல டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன், மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
சாதாரணமாக ஒரு கிளினிக்கிற்கு 15 பேர் வந்த நிலையில், தற்போது 50 பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு, குளிர் மற்றும் மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் காரணமாக உள்ளன. பள்ளிகள் வாயிலாகவும், மாணவர்களிடையே தொற்றுகள் பரவல் அதிகரித்துள்ளது.
இது குறித்து, குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் விஸ்வநாதன் கூறியதாவது: பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும்.
இதனால், குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்த பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. எந்த வகை வைரஸ், பாக்டீரியா தொற்றாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால், பாதிப்பின் தீவிரத்தை குறைக்கலாம்.
அதில், பள்ளி வளாகங்களை கிருமி நாசினி கொண்டு துாய்மைப்படுத்தி வைத்திருத்தல் அவசியம். கழிப்பறையை சுகாதாரமாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சிய நீரை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
தனிநபர் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க, அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றால், பாதிப்பின் தீவிர தன்மையை கட்டுப்படுத்துவதுடன், மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.