தென்னை மட்டையால் மின் விபத்து; தடுக்க வந்து விட்டது சிலிக்கான் கம்பி
தென்னை மட்டையால் மின் விபத்து; தடுக்க வந்து விட்டது சிலிக்கான் கம்பி
தென்னை மட்டையால் மின் விபத்து; தடுக்க வந்து விட்டது சிலிக்கான் கம்பி
ADDED : ஜூன் 18, 2024 04:54 AM
சென்னை : தென்னை மரங்களில் இருந்து விழும் மட்டைகள், மின்கம்பி மீது விழுவதால், அவை அறுந்து விழுகின்றன.
அந்த கம்பி மேல் ஈரப்பதத்துடன் உள்ள தென்னை மட்டையை, மனிதர்கள் மற்றும் கால்நடைகள் தொடும் போது மின்விபத்து ஏற்படுகிறது.
இதைத் தடுக்க, சிலிக்கானால் மூடப்பட்டிருக்கும் மின்கம்பியை பொருத்தும் பணியை, மின்வாரியம் துவக்க உள்ளது.
தமிழக மின்வாரியம், சென்னையில் சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள் வாயிலாகவும், மற்ற இடங்களில் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாகவும், மின் வினியோகம் செய்கிறது. மழை, புயலின் போது கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பி அறுந்து விழுவது தொடர் கதையாகிறது.
சென்னையை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. அந்த மரங்களில் இருந்து தென்னை மட்டைகள், மின்கம்பிகள் மீது விழுகின்றன.
அப்போது, கம்பி அறுந்து விழுவதால் மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது. சிலர், மின்கம்பி மீது உள்ள தென்னை மட்டையை எடுக்கும் போது, விபத்துகளில் சிக்குகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வழக்கமான மின்கம்பிகளுக்கு பதில், 'சிலிக்கான் ஓவர்ஹெட் லைன் இன்சுலேஷன் ஸ்லீவ்' எனப்படும், சிலிக்கானால் மூடப்பட்ட மின்கம்பி வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிலிக்கானால் மூடப்பட்ட மின்கம்பி வழித்தடத்தில், தென்னை மட்டை விழுந்து கம்பி அறுந்து விழுந்தாலும், மின்விபத்து ஏற்படுவது தடுக்கப்படும்.
சோதனை முயற்சியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆழியாறு; கோவையில் நெகமம் என்ற இடத்தில், 20 கி.மீ., துாரம் சிலிக்கானால் மூடப்பட்ட மின்கம்பி அமைக்கப்பட்டது; இது வெற்றிகரமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து, தற்போது உயரழுத்த பிரிவில், 22 கிலோ வோல்ட் வழித்தடம் அமைக்கவும், 2,000 கி.மீ; தாழ்வழுத்தப் பிரிவில், 11 கி.வோ., திறனில் வழித்தடம் அமைக்கவும், 2,500 கி.மீ., துாரத்திற்கு மின்கம்பிகள் வாங்கப்பட உள்ளன. இவ்வகை மின்கம்பிகள், தென்னை மரங்கள் அதிகம் உள்ள இடங்களில் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.