தமிழக வரலாற்று நுால்களை தமிழில் வெளியிட வலியுறுத்தல்
தமிழக வரலாற்று நுால்களை தமிழில் வெளியிட வலியுறுத்தல்
தமிழக வரலாற்று நுால்களை தமிழில் வெளியிட வலியுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2024 04:53 AM

சென்னை : மத்திய தொல்லியல் துறை, இந்திய வரலாறு, தொல்லியல் குறித்த நுால்களை ஆங்கிலத்தில் வெளியிடுகிறது. பல நுால்கள் ஹிந்தியிலும் வெளிவந்துள்ளன. இவற்றை வரலாற்று மாணவர்களும் ஆய்வாளர்களும் விரும்பி படிக்கின்றனர்.
மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல பிரிவு வெளியிட்டுள்ள நுால்களில் பெரும்பாலும், தமிழக கல்வெட்டுகள் சார்ந்த நுால்கள் உள்ளன. மேலும், தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழக புராதன சின்னங்களை பற்றிய நுால்களும் உள்ளன.
மேலும், ஆதிச்சநல்லுார் குறித்த அகழாய்வு பற்றிய நுால்களும் வெளிவந்துள்ளன. இவற்றை, தமிழ் மொழியை மட்டுமே அறிந்த ஆய்வாளர்களால் படிக்க முடியவில்லை. அவற்றில் உள்ள கலைச்சொற்கள், துறை சாராத ஆய்வாளர்களுக்கு புரிவதில்லை. அதனால், தமிழிலும் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: மத்திய தொல்லியல் துறைக்கு, தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் வட்டார அலுவலகங்கள் உள்ளன. அவற்றின் அதிகாரிகள், தமிழக கல்வெட்டுகள், புராதன சின்னங்கள், அகழாய்வுகள் குறித்த ஆங்கில நுால்களை, தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி பெற வேண்டும்.
மொழிபெயர்ப்பு பணியால் அவர்களின் பணிகள் பாதிக்கப்படுவதாக கருதினால், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தொல்லியல் அதிகாரிகள், அலுவலர்களிடம் அந்த பணியை ஒப்படைக்கலாம். அது, எங்களை போன்ற தமிழ் மட்டும் அறிந்த வரலாற்று ஆர்வலர்களுக்கு உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.