Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஆவின் பால் தினசரி விற்பனை 3 லட்சம் லிட்டர் அதிகரிப்பு

ஆவின் பால் தினசரி விற்பனை 3 லட்சம் லிட்டர் அதிகரிப்பு

ஆவின் பால் தினசரி விற்பனை 3 லட்சம் லிட்டர் அதிகரிப்பு

ஆவின் பால் தினசரி விற்பனை 3 லட்சம் லிட்டர் அதிகரிப்பு

ADDED : ஜூன் 18, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
சென்னை : 'ஆவின் பால் விற்பனை, 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, 23 சதவீதம் அதிகரித்துள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு அறிக்கை:

உலக அளவில் பால் உற்பத்தியில், இந்தியா முன்னணி நாடாக உள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த பால் உற்பத்தியில் தமிழகம், 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில், 10,814 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இவற்றில் செயல்பாட்டில் உள்ள 9,189 சங்கங்களில், 1,856 மகளிர் சங்கங்கள். கடந்த மூன்று ஆண்டுகளில், பால் வளத்துறையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் வழியாக, தினமும், 3.85 லட்சம் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். தினசரி 35.67 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 4 லட்சம் லிட்டர் பால், உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் வழியாக விற்கப்படுகிறது. இது போக, 31.67 லட்சம் லிட்டர் பால், 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் வழியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு தாமதம் இல்லாமல், பணம் பட்டுவாடா நேரடியாக, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர்களுக்கு 25.85 லட்சம் ரூபாய்; இணையத்தின் பணியாளர்களுக்கு 11.61 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் ஐந்து லட்சம் கறவை மாடுகளுக்கு, 85 சதவீதம் மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆவின் பால் தினசரி விற்பனை, 3 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

கடந்த 2023 - 24ம் ஆண்டில், தினமும் அதிகபட்சமாக 31.37 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, 2021ம் ஆண்டு பால் விற்பனையை ஒப்பிடும் போது, 23 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள், 'ஆன்லைன்' வணிகம் வழியே, 30.19 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us