ராகுலுக்கு திடீர் பாராட்டு... செல்லுார் ராஜு 'ஐஸ் மழை'
ராகுலுக்கு திடீர் பாராட்டு... செல்லுார் ராஜு 'ஐஸ் மழை'
ராகுலுக்கு திடீர் பாராட்டு... செல்லுார் ராஜு 'ஐஸ் மழை'
ADDED : ஜூன் 20, 2024 03:58 AM

மதுரை : அ.தி.மு.க., கூட்டணியில் சேர நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுத்த நிலையில் நேற்று தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., - எம்.பி., ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி மீண்டும் சர்ச்சை யில் சிக்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் ஒட்டுமில்லை; உறவுமில்லை என ஏற்கனவே கூறிவிட்டோம். அப்புறம் எப்படி எங்களை பா.ஜ.,வின் 'பி' டீம் எனக் கூற முடியும். விக்கிரவாண்டியில் பா.ம.க., தைரியமாக போட்டியிடவில்லை.
அத்தொகுதி ஓட்டு வங்கியை அறியவே போட்டியிடுகிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. காங்கிரசை கட்டி காக்க ராகுல் விடாமுயற்சி எடுத்து வருகிறார். அவருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் தி.மு.க., பேசி வருகிறது. வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு செல்லுார் ராஜு கூறினார்.
'எம்.ஜி.ஆர்., போல் நடிகர் விஜய் மக்களுக்கு நிறைய கொடுக்க நினைக்கிறார். அவர் அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும்' என நேற்று முன்தினம் தன் விருப்பத்தைத் தெரிவித்த செல்லுார் ராஜு, நேற்று காங்., - எம்.பி., ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்கனவே ராகுலை பாராட்டி கட்சி தலைமையின் கண்டிப்புக்கு ஆளான நிலையில், மீண்டும் ராகுலைப் பாராட்டியுள்ளது தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.