இந்திய ஆட்சி பணிக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: அகர்வால்
இந்திய ஆட்சி பணிக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: அகர்வால்
இந்திய ஆட்சி பணிக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: அகர்வால்
ADDED : ஜூன் 03, 2024 05:54 AM

சென்னை : ''மாணவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு தயாராக வேண்டும்,'' என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,யின் முன்னாள் தலைவர் அகர்வால் பேசினார்.
சென்னை மயிலாப்பூர், பி.எஸ்., கல்வி அறக்கட்டளை சார்பில் துவக்கப்பட்டுள்ள, 'ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி அகாடமி பார் சிவில் சர்வீசஸ்' என்ற, ஆட்சிப்பணி தேர்வுக்கான பயிற்சி மையத்தில், 'ஆட்சிப்பணி தேர்வும், சவால்களும்' என்ற தலைப்பில், அவர் பேசியதாவது:
நாட்டின் அதிகார மையமான ஆட்சி பணியாளர்களுக்கான தேர்வுகளை பற்றி அறிந்து, அவற்றை அடைவதற்கான முயற்சிகளை, மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தென்மாநில மாநகரங்களில், தகவல் தொழில்நுட்பத்துறை பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. அதனால், இங்குள்ள மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப துறையில் சேர்ந்து சம்பாதிக்க விரும்புகின்றனர்.
இதனால், ஆட்சி பணி குறித்த ஆர்வம் குறைந்துள்ளது என்றாலும், சமூகத்துக்கான பங்களிப்பை, ஆட்சிப் பணியின் வாயிலாகவே வழங்க முடியும். யு.பி.எஸ்.சி., தேர்வில் பங்கேற்க, பின்தங்கிய கிராமபுறங்களில் உள்ள நடுத்தர குடும்ப மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அவர்கள் தேர்வுகள் குறித்தும், அதன் நடைமுறை குறித்தும் புரிந்துள்ளனர். பொதுவாக, பெற்றோரின் விருப்பத்தால் பலர் தேர்வெழுத வருகின்றனர்.
நாடு முழுதும் அதிகம் பேர் போட்டியிட்டாலும், ஆண்டுக்கு, 200 பேர் மட்டுமே தேர்வாக முடியும். தங்களின், 21வது வயது முதல் களத்தில் இறங்கி, 30 -- 35 வயது வரை தேர்வெழுதலாம். முதல் இரண்டு போட்டிகள் அனுபவங்களை பெறுவதற்காகவே பெரும்பாலானோர் செலவிட நேர்கிறது. அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் உள்ள, 80 சதவீதம் பேர் மூன்றாவது தேர்வில் தேர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
ஆங்கில மொழி அறிவுடன், கூர்ந்து கவனித்து படிக்கும் ஆர்வமும் இருந்தால், இந்த தேர்வை எதிர்கொள்வது எளிது. தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள இந்த காலத்தில், இணையத்தின் வழியாக தகவல்களை அதிகம் சேகரிக்க முடியும்.
என்றாலும், நிரூபிக்கப்பட்ட நுால்களையும், நல்ல நாளிதழ்களையும் தினமும் படிக்க வேண்டும்.
முதல்நிலை தேர்வு, பொதுத்தேர்வு, நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து, தேர்வாணையத்தின் பழைய கேள்வி -- பதில் மாதிரிகளை ஆராய வேண்டும். தனித்தன்மையுடனும், பிரச்னைகளின் போது சுயசிந்தனையின் வாயிலாக, துரிதமாக எடுக்கும் சுயமுடிவுகளே வெற்றியை தரும். இதற்கு, நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அகர்வால் பேசினார்.
நிகழ்ச்சியில், பி.எஸ்.எஸ்., பள்ளி முதல்வர் ரேவதி, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஸ்ரீபதி, ராமச்சந்திரன், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராணுவத்திலும் சேவை செய்யலாம்!
ஆட்சிப் பணிக்கு சென்றால் மட்டும், நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்பதில்லை, ராணுவம், விமானப்படை, விண்வெளி ஆய்வு உள்ளிட்ட துறைகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் களமிறங்கி, நாட்டுக்கு சேவை செய்யலாம்.
- சிவராமன், முன்னாள் செயலர்,
தமிழக வருவாய்த்துறை