சீமான் வீட்டு பணியாளர் காவலாளிக்கு ஜாமின்
சீமான் வீட்டு பணியாளர் காவலாளிக்கு ஜாமின்
சீமான் வீட்டு பணியாளர் காவலாளிக்கு ஜாமின்
ADDED : மார் 13, 2025 11:09 PM
சென்னை:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாள் சீமான் வீட்டு பணியாளர் மற்றும் காவலாளி ஆகியோருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின், நீலாங்கரை வீட்டில், வளசரவாக்கம் போலீசார் மீண்டும், 'சம்மன்' ஒட்டினர்.
அது கிழிக்கப்பட்ட விவகாரத்தில், சீமான் வீட்டு பணியாளர் சுபாகர், வீட்டு காவலாளியான முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் ஆகியோரை, நீலாங்கரை போலீசார் கைது செய்து, காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை, செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.ராமமூர்த்தி, எஸ்.சங்கர் ஆஜராகி, ''ஜாமினில் வெளிவரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவர் மீது, வேறு எந்த வழக்குகளும் இல்லை,'' என்றனர்.
காவல்துறை தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வம் ஆஜராகி, ''இன்ஸ்பெக்டரை தாக்கியுள்ளனர். துப்பாக்கி வெடித்து இருந்தால் துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்திருக்கும். சொந்த பாதுகாப்புக்கு தான் துப்பாக்கி. மற்றவர்களை மிரட்ட துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை,'' என்றார்.
இதையடுத்து, 'துப்பாக்கி உரிமையை மீறியிருந்தால், அதை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவெடுக்கலாம்' என கூறிய நீதிபதி, இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 'மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:30 மணிக்கு பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனையும் விதித்தார்.