ரூ.100 கோடி மோசடி: முக்கிய புள்ளி கைது
ரூ.100 கோடி மோசடி: முக்கிய புள்ளி கைது
ரூ.100 கோடி மோசடி: முக்கிய புள்ளி கைது
ADDED : ஜூன் 08, 2024 01:39 AM

சென்னை:மோசடி வழக்கில், ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேரில், ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களை, அதே பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஞானதுரை, அவரது சகோதரர் ராபின் ஆரோன் ஆகியோர் நடத்தி வந்தனர்.
தங்கள் நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வாரம் 3,000 ரூபாய் வட்டியாக தரப்படும். 10,000 ரூபாய் செலுத்தினால், 12 மாதத்தில், 2.40 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தனர்.
அத்துடன், 5 லட்சம் ரூபாய்க்கு நகை அடமானம் வைத்தால், பணத்தை கையில் தர மாட்டர். அதை முதலீடாக மாற்றி விடுவர். ஆனால், முதலீட்டாளர்கள் கொடுத்த நகையை, 7.50 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து விடுவர்.
இப்படி விதவிதமான திட்டங்களை அறிவித்து, முதலீட்டாளர்களிடம் இருந்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். அந்த பணத் தில், சினிமா படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, டில்லியில் பதுங்கி இருந்த ஆல்வின் ஞானதுரை, ஆரோன் ராபின் ஆகியோரை, கடந்தாண்டு கைது செய்தனர். மோசடி பணத்தில் ஏ.ஆர்.மஹால் என்ற கட்டடத்தை கட்டி இருந்ததும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டது, ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோரின் சித்தப்பா ஆப்ரகாம், 45 என்பது தெரியவந்தது. அவர் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு ஆப்ரகாமை நேற்று கைது செய்தனர்.