தேவையற்ற 1,500 சட்டங்கள் அகற்றம்: எல்.முருகன் பேட்டி
தேவையற்ற 1,500 சட்டங்கள் அகற்றம்: எல்.முருகன் பேட்டி
தேவையற்ற 1,500 சட்டங்கள் அகற்றம்: எல்.முருகன் பேட்டி
ADDED : ஜூன் 23, 2024 05:22 PM

சென்னை: 'நாட்டிற்கு தேவையற்ற 1,500 சட்டங்களை அகற்றி இருக்கிறோம்' என மத்திய அமைச்சர் எல்.முருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை வி.ஐ.டி பல்கலையில் நடந்த குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில், இந்தியாவின் முற்போக்கான பாதை குறித்த மாநாட்டை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் துவக்கி வைத்தார். மாநாட்டில், சட்ட விவகாரங்கள் துறை சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் செயலர் ராஜீவ் மணி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் முருகன், தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் நியாயம் கிடைக்காமல் சிரமப்படும் நிலைக்கு புதிய சட்டங்கள் முற்றுப்புள்ளி வைக்கும். பழைய சட்டங்கள் இந்தியர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டமாக தான் இருந்தது. அது வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த சட்டம். பாரத தேசம் வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும்.
பழைய தேவையற்ற சட்டங்களை அகற்ற வேண்டும். நாட்டிற்கு தேவையற்ற 1,500 சட்டங்களை அகற்றி இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்காக தான் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நியாயம் கிடைக்கும் சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்காமல் வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.