'நிவாரணம் வழங்குவதை மறு பரிசீலனை செய்யுங்க'
'நிவாரணம் வழங்குவதை மறு பரிசீலனை செய்யுங்க'
'நிவாரணம் வழங்குவதை மறு பரிசீலனை செய்யுங்க'
ADDED : ஜூன் 24, 2024 06:41 AM
நாகர்கோவில் : ''கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்குவதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்,'' என, நாகர்கோவிலில் இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேசிய தேர்வு முகமை முதன்மை தலைவர் மாற்றப்பட்டுள்ளதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கட்சியின் சட்டசபை குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுடன் விவாதித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். ஆனால், விவாதத்தில் பங்கேற்பதற்கு பதிலாக அ.தி.மு.க.,வினர் சட்டசபை நடைமுறைகளை மீறி செயல்படுகின்றனர். தொடர் வெளிநடப்பு சரியான ஜனநாயக செயல் அல்ல.
கள்ளக்குறிச்சியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டதை பயன்படுத்தி கள்ளச்சாராய விற்பனையை அதிகரித்துள்ளனர். இதுவும் பல உயிர்கள் பலியானதற்கு காரணம்.
இந்தியா - இலங்கை இடையிலான உறவை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ரயில் பெட்டிகள் குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இறந்தால், 3 லட்சம் ரூபாய் மட்டும் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்குவதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீட் முதுநிலை தேர்வை ரத்து செய்ததால் மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கும், செலவினங்களுக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.