உயிர் காக்கும் மருந்து கையிருப்பு விவகாரம்: வெள்ளை அறிக்கை கேட்கிறார் பழனிசாமி
உயிர் காக்கும் மருந்து கையிருப்பு விவகாரம்: வெள்ளை அறிக்கை கேட்கிறார் பழனிசாமி
உயிர் காக்கும் மருந்து கையிருப்பு விவகாரம்: வெள்ளை அறிக்கை கேட்கிறார் பழனிசாமி
ADDED : ஜூன் 24, 2024 06:42 AM

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
கள்ளச்சாராய மரணச் செய்தியறிந்தவுடன், கடந்த 20-ம் தேதி கள்ளக்குறிச்சிக்கு விரைந்தேன். அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை முறைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்.
அந்த நிமிடம் வரை 34 உயிர்களைத்தான் இழந்துஇருந்தோம்.
மெத்தனால் விஷ முறிவு மருந்தான உயிர் காக்கும் போமிபிசோல் மருத்துவமனையில் இருப்பு இல்லை என்ற வேதனையான தகவலை, என்னிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை உடனடியாக பத்திரிகையாளர்கள் வாயிலாக அரசுக்கு சுட்டிக் காட்டினேன்.
அதன்பின், மறுநாள் அவசர அவசரமாக விஷ முறிவு மருந்தான போமிபிசோல் ஆர்டர் செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து வரவழைத்துள்ளனர். அது சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடந்தவற்றை மறைக்கும் முயற்சியில் தான் தமிழக அரசு உள்ளது.
தேவையானால், கடந்த ஜூன் 20ல், அரசு மருத்துவமனைகளில் எத்தனை போமிபிசோல் மருந்து கையிருப்பாக இருந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுகிறேன்.
அதையும் மீறி, ஜூன் 20ல் உயிர் காக்கும் விஷ முறிவு மருந்தான போமிபிசோல் கையிருப்பு இருந்தது; அதை பயன்படுத்தினோம் என்று அரசு சொல்லுமானால், நோயாளிகள் மருத்துவ குறிப்பு, மருத்துவமனை மருந்து கையிருப்பு குறித்த ஆவணங்கள், தமிழக மருத்துவ சேவைக் கழக ஆவணங்களை வெளியிட வேண்டும். அதை வெள்ளையறிக்கையாக கொடுக்க வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பொன்னான நேரத்தை வீணடித்ததால், விலைமதிப்பற்ற 54 உயிர்களை இழந்துள்ளோம்.
அதன்பின்பும், வீண் விவாதம் தொடராமல், எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிர் காக்கும் பணியில் அரசு ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.