உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ADDED : ஜூன் 05, 2024 02:25 AM

புதுடில்லி:''லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்துக்கான வெற்றி. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தீர்மானித்த மக்களின் வெற்றி. நாட்டை சுயசார்புடையதாக மாற்றுவது, ஊழலை ஒழிப்பது, மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாட்டை மாற்றுவது போன்ற உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவோம், '' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதன்படி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில், பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோர், தொண்டர்கள் இடையே பேசினர்.
தொண்டர்களின் வெற்றி வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட, பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த, 1962ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக, மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.
மக்கள் ஆசி
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். மிகச் சிறப்பான முறையில் தேர்தலை நடத்திய தேர்தல் கமிஷன் மற்றும் அதற்கு உதவிய பாதுகாப்புப் படைகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
ஊழல்கள், மோசடிகள் அதிகமாக இருந்த நிலையில், 2014ல் மாற்றத்தை விரும்பி மக்கள் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். அதை உறுதி செய்யும் வகையில், 2019ல் அதைவிட மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தனர். இந்தத் தேர்தலில், ஊழலை முழுமையாக ஒடுக்குவது உள்ளிட்ட உத்தரவாதங்களுடன் மக்களை நாடிச் சென்றோம். நம் கூட்டணிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் ஆசியை மக்கள் அளித்துள்ளனர்.
என்னுடைய தாய் மறைந்த பின் நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். ஆனால், அவர் இல்லாத குறையை நான் உணரவில்லை. நம் நாட்டில் உள்ள தாய்மார்கள் தங்களுடைய அன்பை எங்களுக்கு கொடுத்துள்ளனர். நாட்டு மக்களும் தங்களுடைய அன்பை தெரிவித்துள்ளதால், என் தாய் இல்லை என்பதை நான் உணரவில்லை.
மீண்டும் ஆட்சி
ராணுவ துறையில், ஆத்மநிர்பர் எனப்படும் சுயசார்பு நிலையை எட்டுவதை நாங்கள் நிறுத்த மாட்டோம். ராணுவம் சுயசார்பு நிலையை எட்டும் வரை, எங்களுடைய பணிகள் தொடரும்.
ஊழல்களை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் சவாலானதாகவே உள்ளது. அதை ஒழிப்பது உள்ளிட்ட எங்களுடைய உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம்.
மஹாபிரபு ஜகன்நாதரின் ஒடிசாவில் ஆட்சி அமைக்கும் நல்வாய்ப்பை மக்கள் முதல் முறையாக எங்களுக்கு அளித்துள்ளனர். அதுபோல, ஆந்திராவிலும் எங்களுடைய கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலிலும் மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அளித்துள்ளனர்.
ஆதரவு தொடரும்
கேரளாவில் முதல் முறையாக பா.ஜ.,வுக்கு வெற்றியை மக்கள் தந்துள்ளனர். தெலுங்கானாவில் எங்கள் பலம் இரட்டிப்பாகியுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான எங்கள் கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுபோலவே, தற்போது சட்டசபை தேர்தல் நடந்த மாநிலங்களிலும் எங்களுடைய ஆதரவு தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு வழங்கிய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து, சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டுஉள்ளார்.