பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகளில் மாசு: நீர்வளத்துறை அதிருப்தி
பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகளில் மாசு: நீர்வளத்துறை அதிருப்தி
பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகளில் மாசு: நீர்வளத்துறை அதிருப்தி
ADDED : ஜூன் 03, 2024 07:28 AM

சென்னை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக, நீர்நிலைகள் மாசு அடைந்து வருவதால், நீர்வளத்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீர்வளத்துறை வாயிலாக, 90 அணைகள், 15,000க்கும் மேற்பட்ட ஏரிகள், 10க்கும் மேற்பட்ட பாசன கால்வாய்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும், மற்ற மாவட்டங்களில் பாசன தேவைக்காகவும், நீர்வழித்தடங்கள் துார்வாரப்படுகின்றன.
இவற்றுக்கு முழுமையாக நிதி ஒதுக்குவது கிடையாது. ஒதுக்கும் நிதியை பயன்படுத்தி, நீர்வளத்துறையினர் பணிகளை செய்கின்றனர். வெள்ளநீர் மட்டுமின்றி, அணைகள், ஏரிகளில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் வெளியேறுவதற்கு, பிளாஸ்டிக், பாலிதீன், பழைய துணிகள் உள்ளிட்டவை பெரும் தடையாக உள்ளன.
கடந்தாண்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, சாலைகள், மழைநீர் கால்வாய், சுரங்கப் பாதைகளில் தேங்கியிருந்த பல டன் பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் அகற்றப்பட்டன.
குறைந்த மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாடுகளை, அரசு தடை செய்துள்ளது. தற்போது, அவற்றின் பயன்பாடு மீண்டும் அதிகரித்து உள்ளது. எந்த பிரச்னையும் இன்றி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியும் நடந்து வருகிறது. இதனால், நீர்வழித்தடங்களில், அவை தடையை ஏற்படுத்தி வருகின்றன. மழை காலங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சுற்றுச்சூழல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், இவ்விஷயத்தில் அலட்சியமாக இருப்பதால், நீர்வளத் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.