ADDED : மார் 12, 2025 12:42 AM

மார்ச் 12, 1907
ஆந்திர மாநிலம், கர்னுாலில், மாணிக்கம் - தாயாரம்மாள் தம்பதிக்கு மகனாக, 1907ல் இதே நாளில் பிறந்தவர் மா.ராசமாணிக்கம்.
இவரின் தந்தை ஆந்திரா, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நில அளவையராகவும், தாசில்தாராகவும் பணியாற்றினார். இவர், ஆந்திராவில் தெலுங்கு வழியிலும், தமிழகத்தில் தமிழ் வழியிலும் படித்தார்.
இவர் சிறுவனாக இருந்தபோதே தந்தை மறைந்ததால், பள்ளி படிப்பை தொடராமல், தையல் கடையில் வேலைக்கு சேர்ந்தார். தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், இவரை தன் சொந்த செலவில் படிக்க வைத்தார்.
தமிழறிஞர்களின் தொடர்பால், வித்வான், எம்.ஓ.எல்., முனைவர் பட்டங்களை பெற்று, பல பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். 'தமிழர் திருமணம், மூவேந்தர் வரலாறு, பெரியபுராணம், சைவ சித்தாந்தம், பத்துப்பாட்டு' உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளையும், நுால்களையும் வெளியிட்டார்.
எளிய நடையில், உரிய விளக்கங்களுடன் இவர் எழுதிய நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவர், தன் 60வது வயதில், 1967, மே 26ல் காலமானார்.
தமிழறிஞர் மா.ரா., பிறந்த தினம் இன்று!