53 பேருக்கு வேலை கிடைத்தது
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார். ஆடை உற்பத்தி, ஜவுளி வர்த்தகம், நகை கடை உள்பட பல்வேறுவகை நிறுவனங்களை சேர்ந்த 29 பேர் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான தொழிலாளரை தேர்வு செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வேலைதேடுவோர் 94 பேர் முகாமில் பங்கேற்றனர். ஆண்கள் 38 பேர்; பெண்கள் 15 பேர் என, 53 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, பணிநியமன கடிதம் வழங்கப்பட்டது.
தி.மு.க.,வுக்கு தாவிய கவுன்சிலர்கள்
வெள்ளகோவில் நகர அ.தி.மு.க., துணை செயலாளர் மணி. கவுன்சிலராகவும் உள்ளார். நகர அ.தி.மு.க., 'ஐ.டி.,' விங் தலைவர் பிரபு. இருவரும் 50 பேருடன் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், வெள்ளகோவில் நகர பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், மாற்று கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க., வில் இணைந்தனர். அமைச்சர் கயல்விழி, எம்.பி., பிரகாஷ், தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட துணை செயலாளர் முத்துக் குமார், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
'செஸ்' வரி நீக்கத்துக்கு வரவேற்பு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், ''தமிழக அரசு, மக்காச்சோளத்துக்கு விதித்த 'செஸ்' வரியை ரத்து செய்ததற்கு, விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால், மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் சுமை குறையும். இதேபோல், நெல், புகையிலை, பருத்தி என, 39 விளை பொருட்களுக்கும் 'செஸ்' வரி உள்ளது. வேளாண் விற்பனை கூடங்களில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விளைநிலங்களில், விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே நடக்கும் நேரடி பரிவர்த்தனைக்கு முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுக்கிறோம்,'' என்றார்.
இளைஞரணி பொதுக்கூட்டம்
காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவிலில், தி.மு.க., இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றார். நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். ஈரோடு எம்.பி.,பிரகாஷ், அமைச்சர் கயல்விழி, தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், தலைமை கழக பேச்சாளர் இந்திரகுமார் தேரடி உள்ளிட்டோர் பேசினர்.
அரசு நிலத்தில் மண்டபம்?
நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலம், ஆக்கிரமிப்பு செய்து தனி நபர் ஒருவர் திருமண மண்டபம் கட்டியுள்ளார். இது குறித்து, கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில், வடக்கு தாலுகா அலுவலர்கள ஆய்வு நடத்தினர். அதில் நெருப்பெரிச்சல் கிராமம், க.ச.எண்: 556 மற்றும் 566 ஆகியவற்றில் உள்ள நிலங்கள் அரசு ஆவணங்களின்படி அளவீடு செய்து, ஆய்வு செய்யப்பட்டது. இதில், க.ச.எண்: 566ல், மந்தை, ஓடை புறம்போக்கு நிலத்தில், கோவிலும், தனியார் மண்டபமும் அமைந்துள்ளன. இதில் மந்தை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து கால்நடை பராமரிப்பு துறைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
நுாறு நாள் திட்டத்தில் முறைகேடு புகார்
பொங்கலுார் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்காத சிலருக்கு வேலை செய்ததாக கணக்கு காண்பித்ததாகவும், அலகுமலை அருகே மரக்கன்று நட்டதாக கணக்கு காண்பிக்கப் பட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் புகார் மனு அளித்திருந்தார். இதன்பேரில் பணித்தள பொறுப்பாளராக இருந்தவர் உறவினர்களுக்கு வேலை வாங்கித் தந்தது, குடும்ப உறுப்பினர் பெயரில் அட்டை பெற்றது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்தது. விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பி.டி. ஓ., ஜோதி, துணை பி.டி. ஓ., விஜயலட்சுமி உடன் இருந்தனர்.
இலவச பட்டா வழங்கல்
காங்கயம் தாலுகா, முத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.ஓ, கார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். முத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னமுத்துார், ஊடையம், முத்துார் பகுதிகளை சேர்ந்த 419 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தி.மு.க., ஆலோசனை கூட்டம்
காங்கயம் நகர தி.மு.க., நிர்வாகிகள், பூத் வாரியான ஒருங்கிணைப்பாளர்கள், ஏஜன்ட்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிழக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன், தெற்கு மாவட்ட யெலாளர் பத்மநாபன், தொகுதி பார்வையாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தி.மு.க., அரசு செய்த நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; நிர்வாகிகள் தங்களது பகுதியில் கூட்டங்களை நடத்த வேண்டும். பூத் ஏஜன்ட்கள் தங்கள் பகுதியில் ஒரு வாக்காளர் கூட விடமால் ஓட்டுகளைப் பதிவு செய்யும் வகையில், பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.