ADDED : ஜூன் 19, 2024 09:28 PM

ஜூன் 20, 1958
ஒடிசா மாநிலம், பைடாபோசி கிராமத்தில், பிரஞ்சி நாராயண்துடுவின் மகளாக, 1958ல் இதே நாளில் பிறந்தவர் திரவுபதி முர்மு. இவர், புவனேஸ்வர் உயர்நிலைப்பள்ளி, ரமாதேவி மகளிர் கல்லுாரிகளில் படித்தார். படிக்கும்போது, பிரம்ம குமாரிகள் இயக்கத்தில் சேர்ந்து தியானம், யோகா கற்றார். வங்கியாளர் சரண் முர்முவை மணந்தார். பின், ஒடிசா மாநில நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராக சேர்ந்தார்.
ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றினார். ராய்ரங்பூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றார். பின், பா.ஜ.,வில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்து, அதே தொகுதியில் எம்.எல்.ஏ., ஆனார். மாநில வணிகம், போக்குவரத்து துறை அமைச்சரானார்.
தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார். 2022ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாட்டின் 15வது ஜனாதிபதி, இரண்டாவது பெண் ஜனாதிபதி, முதல் பழங்குடியின ஜனாதிபதி, சுதந்திரத்திற்குப் பின் பிறந்த முதல் ஜனாதிபதி உள்ளிட்ட பெருமைகளை உடையவர்.
இவரது 66வது பிறந்த தினம் இன்று!