ADDED : ஜூன் 18, 2024 09:36 PM

ஜூன் 19, 1935
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில், சுப்பிரமணியன் செட்டியார் - ஆனந்தவல்லி தம்பதியின் மகனாக, 1935ல் இதே நாளில் பிறந்தவர் சு.ப.திண்ணப்பன். இவர், சிறு வயதிலேயே தாயை இழந்து, தஞ்சாவூரில் இருந்த உறவினர்களால் வளர்க்கப்பட்டார். திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் பள்ளி, அழகப்பர் கல்லுாரி, சென்னை பச்சையப்பன் கல்லுாரிகளில் தமிழ் படித்தார்.
தமிழறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், மு.வரதராசனார் உள்ளிட்டோரிடம் படித்ததால் எழுத்தாற்றலுடனும் வளர்ந்தார். தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேஷியா, கலிபோர்னியாவில் உள்ள பல்கலைகளில் வருகைதரு பேராசிரியராக பணியாற்றினார்.
பல நாடுகளில் அரசின் மொழிபெயர்ப்பு துறை, தேர்வுத் துறை அதிகாரியாக பணியாற்றினார். பன்னாட்டு இதழ்களில், தமிழியல் ஆய்வு கட்டுரைகளை எழுதினார். மலேஷியாவில், 'அருள்நெறித் திருக்கூட்டம்' வாயிலாக சைவ சமய உரை நிகழ்த்தினார். சிங்கப்பூரில் தமிழில் ஆய்வு செய்யும் உரிமை பெற்றார்.
கடல் கடந்த தமிழர்களை மொழி, கலாசாரத்தால் ஒருங்கிணைத்தும் வருகிறார். வெளிநாட்டு அதிபர்களுக்கு தமிழ் கற்பிக்கும் தமிழறிஞரின் 90வது பிறந்த தினம் இன்று!