ADDED : ஜூன் 17, 2024 12:33 AM

ஜூன் 17, 1950
புதுச்சேரியில் உள்ள தெலார்சுபேட்டை எனும் தமிழூரில், பரமசிவத்தின் மகனாக, 1950, ஜூன் 17ல் பிறந்தவர் அருளி.
வணிகவியல் மற்றும் சட்டம் படித்த இவர், வழக்கறிஞராக பணியாற்றினார். தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்டோரின் தமிழ் பணிகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் ஈடுபட்டார். பல மொழிகள் அறிந்த இவர், தனித்தமிழ் வளர்ச்சிக்காக, துாய தமிழில் பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, தமிழ் மொழி பற்றாளர்களை இணைத்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலையில் விருந்து தகைமையாளர், ஆய்வறிஞர், பேராசிரியர் பணிகளை செய்தார். இவருக்காக அங்கு புதிய துறை உருவாக்கப்பட்டது.
இவர், 25க்கும் மேற்பட்ட ஆய்வு நுால்கள், 250க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி உள்ளார். இவர் எழுதிய, 'இவை தமிழல்ல, யா - ஒரு வேர்ச்சொல் விளக்கம், அயற்சொல் அகராதி, அருங்கலைச்சொல் அகரமுதலி, மரம் -செடி -கொடி-வேர்' உள்ளிட்ட தமிழ் ஆய்வு நுால்களும், 'ஒரிஜினல் ஆரிஜின்ஸ்' எனும் ஆங்கில ஆய்வு நுாலும், தமிழ் மொழி ஆய்வு செய்வோரால் பாராட்டப்பட்டவை. தனிம வரிசை அட்ட வணையில் உள்ள உலோகங்கள், அலோகங்கள், உலோகப் போலிகளுக்கு தமிழ் பெயர் இட்டுள்ளார்.
தமிழ் வேர்ச்சொல் ஆய்வாளரின், 74வது பிறந்த தினம் இன்று!