நான்கு மாத நிலுவை ரூ.120 கோடி பால் உற்பத்தியாளர்கள் போராட முடிவு
நான்கு மாத நிலுவை ரூ.120 கோடி பால் உற்பத்தியாளர்கள் போராட முடிவு
நான்கு மாத நிலுவை ரூ.120 கோடி பால் உற்பத்தியாளர்கள் போராட முடிவு
ADDED : மார் 14, 2025 12:50 AM

சென்னை:'தமிழகம் முழுதும், ஆவின் நிறுவனத்திற்கு, பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு, கடந்த நான்கு மாதமாக வழங்காமல் உள்ள ஊக்கத்தொகை நிலுவை 120 கோடி ரூபாயை, அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம், சராசரியாக 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது.
ஆவின் கூட்டுறவு சங்கங்களில், 20 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். சராசரியாக 8 லட்சம் விவசாயிகள், ஆவின் நிறுவனத்திற்கு, பால் ஊற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் வழங்க வேண்டிய ஊக்கத் தொகை, கடந்த நான்கு மாதமாக வழங்கப்படவில்லை.
இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறையும், இதே போல், நான்கு மாதங்கள் விவசாயிகளை அலைய வைத்து, கடந்த நவம்பரில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன், நிலுவையில் உள்ள 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி, விவசாயிகளின் நலனை காக்க வேண்டும்.
இல்லையெனில், கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.