நீலகிரி சாலை விரிவாக்கத்தால் நிலச்சரிவு: தீர்ப்பாயம் விசாரணை
நீலகிரி சாலை விரிவாக்கத்தால் நிலச்சரிவு: தீர்ப்பாயம் விசாரணை
நீலகிரி சாலை விரிவாக்கத்தால் நிலச்சரிவு: தீர்ப்பாயம் விசாரணை
ADDED : ஆக 02, 2024 12:41 AM

சென்னை: 'நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கும் வகையில், சூழலியலை அழித்து ஊட்டி -- குன்னுார், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை விரிவாக்கப் பணிகள் நடப்பது குறித்து, தேசிய, மாநில நெடுஞ்சாலை துறைகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி முதல் குன்னுார் வரை, கோத்தகிரி முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வரை, சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகளை கணக்கிடுதல் போன்ற சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாமல், முறையான திட்டமிடல் இல்லாமல், நீலகிரி மலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன.
சில இடங்களில் கலெக்டரின் அனுமதியின்றி பாறைகள் வெட்டப்படுகின்றன. மரங்கள் வேரோடு அகற்றப்படுகின்றன. மலைச்சரிவுகளில், நிலையற்ற மண்ணில் தடுப்புகளை அமைத்து அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால், சூழலியல் அழிக்கப்பட்டு, நிலச்சரிவு அபாயம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என, நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாமல், சூழலியலை அழித்து, நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கும் வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடப்பது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை, தமிழக நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீலகிரி கலெக்டர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை, செப்டம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.