'கால்நடைகளுக்கும் இதயம், சிறுநீரகம் பாதிப்பு!'
'கால்நடைகளுக்கும் இதயம், சிறுநீரகம் பாதிப்பு!'
'கால்நடைகளுக்கும் இதயம், சிறுநீரகம் பாதிப்பு!'
ADDED : ஆக 02, 2024 12:50 AM

சென்னை: சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியில், தேசிய அளவிலான கால்நடை மற்றும் செல்லப்பிராணிகள் சிகிச்சை முறைகள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
இதில், நாடு முழுதிலும் இருந்து, 405 கால்நடை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கில், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதாவது:
கால்நடை மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்களின் கூட்டு முயற்சியால், செயற்கை நுண்ணறிவுகளைக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் முடியும்.
இதுபோன்ற மருத்துவ உபகரணங்களை குறைந்த செலவில் தயாரிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் பேசியதாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மாதிரியைக் கொண்டு, நாடு முழுதும், 14 மருத்துவ பல்கலைகள் துவங்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து, நம் பல்கலை, தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது.
கால்நடைகளுக்கும், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு முறிவு, கண் கோளாறு, தோல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதுதொடர்பான சிகிச்சை அளிக்கவும், தனித்தனி பிரிவுகள் செயல்படுகின்றன. அதன்படி, கடந்தாண்டில் மட்டும் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.