23 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட கான்ஸ்டபிளுக்கு பணி: ஐகோர்ட்
23 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட கான்ஸ்டபிளுக்கு பணி: ஐகோர்ட்
23 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட கான்ஸ்டபிளுக்கு பணி: ஐகோர்ட்
ADDED : ஜூன் 13, 2024 01:55 AM
சென்னை:மொட்டை கடிதங்கள் எழுதியதாக, 23 ஆண்டுகளுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளை, ஆறு வாரங்களில் மீண்டும் பணியில் அமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994ல், போலீஸ் கான்ஸ்டபிளாக எம்.பாலச்சந்திரன் என்பவர் பணியில் சேர்ந்தார். ஆவடி சிறப்பு பிரிவில் பணியாற்றிய பின், 1998 டிசம்பரில், சென்னையில் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
போலீசாரை கொத்தடிமை போல் நடத்துவதாக, கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு மொட்டை கடிதங்கள் அனுப்பியதாக, இவருக்கு, 'மெமோ' அனுப்பப்பட்டது. விசாரணைக்குப் பின் பணி நீக்கம் செய்து, ஆயுதப்படை துணை ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, 2000ம் ஆண்டு பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்டது.
இதை, மாநகர போலீஸ் ஆணையரும், டி.ஜி.பி.,யும் உறுதி செய்தனர். பணி நீக்க உத்தரவை எதிர்த்து, 2007ல் பாலச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். மனுவை, உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். 2019ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்தார்.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜரானார். பணி நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் பாலச்சந்திரனும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, 'தெரியாமல் செய்து விட்டேன். வேறு எங்கும் வேலையில் சேரவில்லை. விவசாயம் பார்க்கிறேன்' என பாலச்சந்திரன் பதில் அளித்தார்.
இதையடுத்து, சக ஊழியர்களின் துாண்டுதலின்படியும், விரக்தியிலும், மொட்டை கடிதங்கள் அனுப்பியதாக கூறியிருப்பதால், ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது சரி தான் என்றாலும், தண்டனையின் அளவு அதிகபட்சமானது என்பதால், பணி நீக்கத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
'ஆறு வாரங்களில், பாலச்சந்திரனை மீண்டும் பணியில் அமர்த்தவும், பணியில் இல்லாத நாட்களுக்கு சம்பளம் மற்றும் பணப்பலன்கள் பெற உரிமையில்லை' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்னும் ஒன்பது ஆண்டுகள் பணிக்காலம் இருப்பதால், ஒழுங்காக பணியாற்றும்படி, அவருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.