நகர்ப்புற நில வழிகாட்டி மதிப்பு 10 சதவீதம் உயர்த்த முடிவு
நகர்ப்புற நில வழிகாட்டி மதிப்பு 10 சதவீதம் உயர்த்த முடிவு
நகர்ப்புற நில வழிகாட்டி மதிப்பு 10 சதவீதம் உயர்த்த முடிவு
ADDED : ஜூன் 13, 2024 01:55 AM
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நில வழிகாட்டி மதிப்புகளை, 10 சதவீதம் உயர்த்தும் வகையில், இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை பதிவுத் துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில், 2012ல் நில வழிகாட்டி மதிப்புகள் ஒட்டுமொத்த நிலையில் சீரமைக்கப்பட்டன. பின், 2021ல் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டன. இந்நிலையில், 2012ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகளை மீண்டும் கடைப்பிடிப்பதாக, பதிவுத் துறை 2023ல் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து விடுபட்ட தெருக்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக கூறி, அனைத்து பகுதிகளுக்குமான நில வழிகாட்டி மதிப்புகளை, 70 சதவீதம் வரை உயர்த்தும் பணிகள் துவங்கின. தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, இந்நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட சர்வே எண்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பை, 10 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இணையதளத்தில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளை, பதிவுத் துறை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
ஒட்டுமொத்த அளவில் நில வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்கும் பணிகள் பாதியில் முடங்கியுள்ளன. அதே நேரம், பத்திரப்பதிவு வருவாய் இழப்புகளை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதனால், தற்காலிக ஏற்பாடாக, சமீபத்திய மாறுதல்கள் மற்றும் உயர் மதிப்பு பதிவுகள் அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த வகையில், தற்போதுள்ள நிலையில் இருந்து வழிகாட்டி மதிப்புகள், 10 முதல், 15 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளன.
இதற்கு தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் புதிய மதிப்புகள் மக்கள் பார்வைக்கு வந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.