இரு விபத்துகளில் மூவர் பலி குற்றாலம் சென்று திரும்பியவர்கள்
இரு விபத்துகளில் மூவர் பலி குற்றாலம் சென்று திரும்பியவர்கள்
இரு விபத்துகளில் மூவர் பலி குற்றாலம் சென்று திரும்பியவர்கள்
ADDED : ஜூன் 17, 2024 12:38 AM

திருநெல்வேலி,: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளித்து விட்டு ஊர் திரும்பியவர்களின் இரண்டு வாகனங்கள் புளியங்குடி அருகே வெவ்வேறு விபத்துகளில் சிக்கியதில் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
சென்னை ஆவடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் மனைவி ஹேமலதா 60. இவர்களது மகன் மாதவன் 29. அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜன் 35, மனைவி பூங்கொடி 30. மகன்கள் வெற்றி செல்வன் 7, மோகிதன் 5, உள்ளிட்ட 10 பேர் திருச்செந்தூர், குற்றாலம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு குற்றாலத்தில் இருந்து சென்னைக்கு காரில் திரும்பி சென்றனர். தென்காசி -- ராஜபாளையம் ரோட்டில் புன்னையாபுரம் அருகே சென்ற போது எதிரே தவிடு ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது. இதில் அனைவரும் படுகாயமுற்றனர். சொக்கம்பட்டி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஹேமலதா பலியானார். லாரி டிரைவர் விளாத்திகுளம் குருசாமியை போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு விபத்து
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 33. காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிகிறார். விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்தார். விருதுநகர் சேத்தூர் வங்கியில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நண்பர் கிருஷ்ணராஜ் 32, மைத்துனர் மாரிமுத்துவுடன் பாஸ்கரன் காரில் குற்றாலம் சென்று திரும்பினர். நள்ளிரவு 3:30 மணிக்கு கார் புளியங்குடி தனியார் கல்லூரி அருகில் ரோட்டோர தென்னை மரத்தில் மோதியது. ராணுவ வீரர் பாஸ்கரன், வங்கிப்பணியாளர் கிருஷ்ணராஜ் பலியாகினர். மாரிமுத்து காயமுற்றார். புளியங்குடி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.