'மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்'
'மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்'
'மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்'
ADDED : ஜூன் 18, 2024 04:43 AM

சென்னை : ‛மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டங்கள நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியர் தெய்வநாயகி மற்றும் அவரது உதவியாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது, லாரி ஏற்றிக் கொல்ல முயன்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சமூக விரோதிகளின் அராஜகம் அதிகமாகியிருக்கிறது. மணல் கடத்தலை எதிர்த்த கிராம நிர்வாக அலுவலர் லுார்து பிரான்சிஸ், தன் அலுவலகத்திலேயே வைத்து மணல் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டார்.
இது போன்ற குற்றச் சம்பவம் நிகழ்ந்த பின் கூட, தி.மு.க., அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தொடர்ந்து சேலம், வேலுார் என மணல் கடத்தல்காரர்கள் அரசு அதிகாரிகளை தாக்குவது தொடருகிறது.
அரசு அதிகாரிகளுக்கே உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறது. தமிழகம் முழுதும் ஆயுதக் கலாசாரம் நிலவுகிறது. போலீஸ் துறையின் கைகள் கட்டப்பட்டு, அதன் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன.
மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இவை பற்றி எதுவுமே அறியாமல், கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரசின் தலையாய கடமையான சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவதில், தி.மு.க., அரசு முழுமையாக தோல்வியுற்றிருக்கிறது.
தி.மு.க., அரசு இனியும் விழித்துக் கொள்ளாவிடில், பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, பொறுப்பான எதிர்க்கட்சியாக, மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.