நீலகிரியில் பா.ஜ., இரண்டாமிடம் எப்படி?
நீலகிரியில் பா.ஜ., இரண்டாமிடம் எப்படி?
நீலகிரியில் பா.ஜ., இரண்டாமிடம் எப்படி?
ADDED : ஜூன் 06, 2024 02:51 AM
திருப்பூர்,:நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் முருகன், கொங்கு மண்டல அளவில், அதிக ஓட்டுகளை பெறுவதற்கு, சமவெளி பகுதிகளில் உள்ள தொகுதிகளே கைகொடுத்தன.
கோவை லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கொங்கு மண்டலத்தில் அதிகபட்சமாக, 4.50 லட்சம் ஓட்டுகளை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக நீலகிரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட முருகன், 2.32 லட்சம் ஓட்டு பெற்றுள்ளார்.
வழக்கமாக, தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவிவந்த இத்தொகுதியில், பா.ஜ., கட்சி மும்முனை போட்டியை ஏற்படுத்தியது.நீலகிரி மலை மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கூடலுார் சட்டசபை தொகுதிகள், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் என, 6 சட்டசபை தொகுதிகளை நீலகிரி லோக்சபா தொகுதி உள்ளடக்கியிருக்கிறது. மொத்தம் பதிவான ஓட்டுகள், 10.13 லட்சம்; இதில், பா.ஜ., வேட்பாளர் முருகன் பெற்ற ஓட்டுகள், 2.32 லட்சம்.
ஊட்டி சட்டசபை தொகுதி - 36,631, கூடலுார் - 27,454, குன்னுார் - 29,230 ஓட்டுகள் என, மலை மாவட்டத்தில், பா.ஜ.,வுக்கு, 93,315 ஓட்டுகள் கிடைத்துள்ளன. சமவெளி தொகுதிகளான பவானிசாகர் - 37,266, மேட்டுப்பாளையம் - 52,324, அவிநாசி - 48,206 ஓட்டுகள் என, ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 796 ஓட்டுகள் கிடைத்துள்ளன. மலை மாவட்ட தொகுதிகளை விட, சமவெளியில் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டு கிடைத்துள்ளது.