முன்னாள் சபாநாயகர் மகனுக்கு சொந்த தொகுதியில் 'வேட்டு'
முன்னாள் சபாநாயகர் மகனுக்கு சொந்த தொகுதியில் 'வேட்டு'
முன்னாள் சபாநாயகர் மகனுக்கு சொந்த தொகுதியில் 'வேட்டு'
ADDED : ஜூன் 06, 2024 02:50 AM

திருப்பூர்:நீலகிரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு, சொந்த தொகுதியிலேயே ஓட்டு குறைந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நீலகிரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ராஜா வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கிய அவிநாசி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மொத்தம் பதிவான, 10.13 லட்சம் ஓட்டுகளில், 2.20 லட்சம் ஓட்டுகளை பெற்று மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
ஆனால், பா.ஜ., வேட்பாளர் முருகன், 2.32 லட்சம் ஓட்டுகளை பெற்று, இரண்டாவது இடம் பிடித்து, அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளினார்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் இடம்பெற்றுள்ள அவிநாசி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க.,வுக்கு அசைக்க முடியாத கோட்டையாக கருதப்பட்டு வந்தது. கடந்த, 1971 முதல் வரை, 2021 வரை நடந்த, 12 சட்டசபை தேர்தலில், எட்டு முறை அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது.
தனபால் மீது அதிருப்தி
'சிட்டிங்' எம்.எம்.ஏ., தனபால், கட்சியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், தொகுதியில் அ.தி.மு.க.,வுக்கான ஓட்டு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
இத்தேர்தலில், அவிநாசி சட்டசபை தொகுதியில் மட்டும், 2.08 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. அ.தி.மு.க.,வுக்கு, 54,543 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 76,824 ஓட்டுகள் அக்கட்சிக்கு கிடைத்தன. கடந்த தேர்தலை விட இம்முறை, 22, 281 ஓட்டுகள் குறைந்தன.
'தொகுதி எம்.எல்.ஏ., தனபாலுக்கு, கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது; தொகுதி மக்களை சந்திக்க அவர் வருவதில்லை; கட்சி நிர்வாகிகளையும் சந்திப்பதில்லை' என்பது போன்ற குறைகளை கட்சியினர் முன்வைக்கின்றனர். அதன் வெளிப்பாடு தான், ஓட்டு குறைவதற்கு காரணம் எனவும் கட்சியினர் கூறுகின்றனர்.
அதே நேரம், அவிநாசி தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு, 48,206 ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. 'அ.தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்களின் ஓட்டுகளை பா.ஜ., அறுவடை செய்திருக்கிறது' எனவும் கட்சியினர் கூறுகின்றனர்.
பா.ஜ.,வினர் கூறுகையில், 'அ.தி.மு.க.,வில் உள்ள பலரும் பா.ஜ., ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர்' என்பதை தான் இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது' என்கின்றனர்.