தேசியமய வங்கி மேலாளரிடம் ரூ.48.57 லட்சம் மோசடி
தேசியமய வங்கி மேலாளரிடம் ரூ.48.57 லட்சம் மோசடி
தேசியமய வங்கி மேலாளரிடம் ரூ.48.57 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 04, 2024 01:26 AM
கோவை: ஆன்லைன் வர்த்தகத்தில், வருவாய் ஈட்டலாம் எனக்கூறி, வங்கி மேலாளரிடம் 48.57 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்கள் குறித்து, மாநகர 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, துடியலுார் அருகே, கு.வடமதுரையைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், 35. பாங்க் ஆப் பரோடா எனும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், கிளை மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, 'பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம்' என, 'வாட்ஸாப்' செய்தி வந்தது.
அதை உண்மை என நம்பிய அவர், கடந்த மார்ச் 14 முதல் மே 1ம் தேதி வரை, 13 பரிவர்த்தனைகளில் 48.57 லட்சம் ரூபாயை, பல வங்கி கணக்குகளுக்கு, அனுப்பி, கூடுதல் பணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஒரு கட்டத்தில் ஏமாற்றப்படுவோம் என உணர்ந்த அவர், செலுத்திய பணத்தை பலமுறை திரும்பக் கேட்டும், அவர்கள் தரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணராஜ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
'ஆன்லைனில் முதலீடு, ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாகக் கூறி வரும் தகவல்களை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என, போலீசார் பலமுறை எச்சரித்தும், வங்கி மேலாளர் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் கூட ஏமாறுகின்றனரே' என போலீசார் கவலை தெரிவித்தனர்.