குதிரை பேரத்தை தடுக்க வேண்டும் ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
குதிரை பேரத்தை தடுக்க வேண்டும் ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
குதிரை பேரத்தை தடுக்க வேண்டும் ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
ADDED : ஜூன் 04, 2024 01:03 AM
சென்னை: 'தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என, ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.அரிபரந்தாமன், பி.ஆர்.சிவக்குமார், சி.டி.செல்வம், எஸ்.விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர், ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதம்:
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து, பல கேள்விகள் எழுகின்றன. தேர்தல் தொடர்பாக பல புகார்கள் கவனத்துக்கு வந்தும், இந்திய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. தொகுதிகள் வாரியாக உள்ள ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் குறித்த முழு விபரங்களை, சரிவர தேர்தல் கமிஷன் தெரிவிக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக, ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிகளவில் வெறுப்பு பேச்சுகளை பேசினர். அதற்கு எதிராக, குறைந்தபட்ச நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது.
ஒருவேளை தொங்கு பார்லிமென்ட் அமைந்தால், குதிரை பேரம் போன்ற அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில், ஏதேனும் விரும்பதகாத நிகழ்வுகள், பிரச்னைகள் ஏற்பட்டால், அதில் உச்ச நீதிமன்றம் உடனே தலையிட தயாராக இருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் காரணமாக, ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள் எழுந்தால், அதை சரி செய்ய, ஐந்து நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.