Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்னும் சில மணித்துளிகளில்... இன்று ஓட்டு எண்ணிக்கை ;அரசியல் கட்சியினர் 'திக்...திக்'

இன்னும் சில மணித்துளிகளில்... இன்று ஓட்டு எண்ணிக்கை ;அரசியல் கட்சியினர் 'திக்...திக்'

இன்னும் சில மணித்துளிகளில்... இன்று ஓட்டு எண்ணிக்கை ;அரசியல் கட்சியினர் 'திக்...திக்'

இன்னும் சில மணித்துளிகளில்... இன்று ஓட்டு எண்ணிக்கை ;அரசியல் கட்சியினர் 'திக்...திக்'

ADDED : ஜூன் 04, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:அரசியல் கட்சியினருக்கு, ஏப்., 19ல் துவங்கிய எதிர்பார்ப்பு, சந்தேகங்களுக்கு இன்று விடை கிடைத்து விடும்.திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை எல்.ஆர்.ஜி., கல்லுாரி மையத்தில் இன்று நடைபெறுகிறது. 82 டேபிள்களில், 746 அலுவலர்கள் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடுகின்றனர்.

திருப்பூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., - அருணாச்சலம், இ.கம்யூ., - சுப்பராயன், பா.ஜ., - முருகானந்தம், நாம் தமிழர் கட்சி - சீதாலட்சுமி உட்பட 13 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். ஆறு சட்டசபைகளை உள்ளடக்கிய திருப்பூர் லோக்சபா தொகுதியில், 1745 ஓட்டுச்சாவடி மையங்களில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மொத்த வாக்காளர் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேரில், 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர்.

மொத்தம் 7 ஆயிரத்து 180 தபால் ஓட்டுக்கள்; சர்வீஸ் வாக்காளரிடமிருந்து 92 தபால் ஓட்டுக்கள் வந்துசேர்ந்துள்ளன. தபால் ஓட்டுக்கள் கலெக்டர் அலுவலக ஸ்ட்ராங் ரூமிலும்; ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், எட்டு ஸ்ட்ராங் ரூம்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஏழு கட்ட லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நடைபெறுகிறது.

கலெக்டர் அலுவலக ஸ்ட்ராங் ரூமிலிருந்து தபால் ஓட்டுக்கள் எடுத்துவரப்படும். காலை, 8:00 மணிக்கு, 7 டேபிள்களில் முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது; சர்வீஸ் வாக்காளர் ஓட்டுக்கள், ஒரு டேபிளில் எண்ணப்படுகிறது.

84 டேபிள்களில்

எண்ணிக்கை

சட்டசபை தொகுதிக்கு ஒன்று வீதம், ஆறு ஓட்டு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்பட்டு, கன்ட்ரோல் யூனிட் மற்றும் ஓட்டுப்பதிவு விவரங்கள் அடங்கிய 17 சி படிவம், ஓட்டு எண்ணிக்கை அரங்க டேபிள்களுக்கு கொண்டுவரப்படும். தொகுதிக்கு 14 டேபிள் வீதம், மொத்தம் 84 டேபிள்களில், ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஒரு நுண்பார்வையாளர், ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர் என டேபிளுக்கு மூன்றுபேர், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடுகின்றனர். கன்ட்ரோல் யூனிட் விவரங்கள் சரிபார்க்கப்படும். இதற்குமுன் திறக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தபின், சீல் அகற்றப்பட்டு, கன்ட்ரோல் யூனிட்டில் ஆன் செய்யப்படும்.

'ரிசல்ட்' பட்டனை அழுத்தப்பட்டு, பதிவான மொத்த ஓட்டுக்கள், வரிசை எண் அடிப்படையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான ஓட்டுக்கள் கன்ட்ரோல் யூனிட் திரையில் தோன்றும். ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள், முகவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில், கன்ட்ரோல் யூனிட்டை உயர்த்தி, பதிவான ஓட்டு விவரங்களை காண்பிப்பர்.

சுற்றுவாரியாக ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற ஓட்டு விவரங்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜூன் ஒப்புதல் பெற்று, அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு சுற்று முடிவையும், மாவட்ட தேர்தல் அலுவலர் மைக் வாயிலாக அறிவிப்பு செய்வார். பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வசதியாக கல்லுாரிக்கு வெளியே இருபுறமும், ஸ்பீக்கர் வைக்கப்பட்டுள்ளது.

------------------------------------

* தபால் ஓட்டு

எண்ணுவது எப்படி?

தபால் ஓட்டு, செல்லும் ஓட்டு, செல்லாத ஓட்டுக்கள் பிரிக்கப்படுகிறது. சர்வீஸ் வாக்காளரின் ஆன்லைன் தபால் ஓட்டுக்களில் உள்ள க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து சரிபார்க்கப்படும். தகுதியான தபால் ஓட்டுக்கள் மட்டும் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். தபால் ஓட்டுக்கள், அந்தந்த வேட்பாளருக்கான பெட்டியில் போடப்படும்; 50 தபால் ஓட்டுச் சீட்டுக்கள் சேர்த்து, பண்டல்களாக வைக்கப்படும்.

* நான்காவது

எம்.பி., யார்?

திருப்பூர் லோக்சபா தொகுதி கடந்த 2009 ல் துவங்கப்பட்டது. முதல் இரண்டு தேர்தல்களில் அ.தி.மு.க., வசமிருந்த தொகுதி, 2019 தேர்தலில் இ.கம்யூ., வசமானது. தற்போதைய தேர்தலில் வெற்றிபெற்று, திருப்பூரின் நான்காவது எம்.பி., என்கிற இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது, இன்று தெரிந்து விடும்.

* டிபாசிட்

கிடைக்குமா?

லோக்சபா தேர்தலில், 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. வேட்பாளர்கள் செலுத்திய டிபாசிட் தொகையை திரும்பப்பெறுவதற்கு, பதிவான மொத்த ஓட்டுக்களில், 6 ல் ஒரு பங்கு ஓட்டு பெற்றிருக்கவேண்டும். அதன்படி, திருப்பூர் தொகுதி வேட்பாளர்களில், 1 லட்சத்து 89 ஆயிரத்து 212க்கு மேல் ஓட்டு வாங்குவோருக்கு மட்டுமே, டிபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.

ஓட்டு எண்ணிக்கை முடிந்தபின் அவற்றுடன் தபால் ஓட்டுக்கள் சேர்க்கப்பட்டு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற மொத்த ஓட்டு விவரம், அறிவிக்கப்படும்; வெற்றிவேட்பாளருக்கு, சான்றிதழ் வழங்கப்படும்

கட்டுப்பாடு கடைபிடிப்பீர்!

ஓட்டு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், 746 பேருக்கு, மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேபிளில் நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக, வேட்பாளர் ஒவ்வொருவரும், தலைமை முகவர், முகவர்களை நியமித்துள்ளனர்.வேட்பாளர்கள், தலைமை முகவர், முகவர்கள், 1,300 பேருக்கு அனுமதி அளித்து, பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு காலை மற்றும் மதிய உணவு கொண்டுவருவதற்காக, வேட்பாளர்களின், 12 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரிவு சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளோர் மட்டுமே, ஓட்டு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். மொபைல் போன், ஸ்மாட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ராணிக் சாதனங்கள் அனுமதிக்கப்படாது. முகவர்கள், காலை, 7:00 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வந்துவிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us