ADDED : ஜூலை 21, 2024 05:37 AM

திட்டக்குடி: துணைத் தலைவரின் கையெழுத்தை போட்டு நிதியை மோசடி செய்த ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், கொரக்கவாடி ஊராட்சியில், தலைவராக சக்திவேல்,47; துணைத் தலைவராக தங்கமணி ராமச்சந்திரன்,39; உள்ளனர்.
ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளின் நிதி தேவைக்காக ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் கையொப்பமிட்ட பி.எப்.எம்.எஸ்., படிவம் மூலம் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து செலவிடுவது வழக்கம்.
ஆனால் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், துணைத் தலைவர் கையெழுத்தை, ஊராட்சி தலைவர் சக்திவேல் போலியாக போட்டு 2 லட்சத்து 70 ஆயிரத்து 950 ரூபாயை முறைகேடாக எடுத்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து துணைத்தலைவர் தங்கமணி ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார், இருவரின் கையெழுத்து மாதிரிகளை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஊராட்சி தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் தங்கமணி ராமச்சந்திரன் கையெழுத்தை போலியாக போட்டு பணத்தை எடுத்தது உறுதியானது.
அதனையொட்டி ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து, ஊராட்சி தலைவர் சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.