போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து
போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து
போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து
ADDED : ஜூலை 29, 2024 12:10 AM

சென்னை: பேராசிரியர்கள் போலி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்தை, கல்லுாரிகள் பெற வேண்டும். இதற்காக, தேவைக்கேற்ப பேராசிரியர்கள் பணியில் இருப்பது போலவும், முறையான விளம்பரங்கள் செய்தது, நியமனம் நடந்தது போலவும், தனியார் கல்லுாரிகள் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாறு, 353 பேராசிரியர்கள், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது கண்டறியப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்ட கல்லுாரிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையிலான குழு கூறியுள்ளது.
இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்லுாரிகள் மற்றும் அந்த கல்லுாரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு கவர்னர் ரவி உத்தரவிட்டு உள்ளார்.
முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானால், கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.