Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஈரோடு தொகுதி மொத்த ஓட்டு பதிவில் 51.43 சதவீதம் பெற்ற தி.மு.க., வேட்பாளர்

ஈரோடு தொகுதி மொத்த ஓட்டு பதிவில் 51.43 சதவீதம் பெற்ற தி.மு.க., வேட்பாளர்

ஈரோடு தொகுதி மொத்த ஓட்டு பதிவில் 51.43 சதவீதம் பெற்ற தி.மு.க., வேட்பாளர்

ஈரோடு தொகுதி மொத்த ஓட்டு பதிவில் 51.43 சதவீதம் பெற்ற தி.மு.க., வேட்பாளர்

ADDED : ஜூன் 06, 2024 02:48 AM


Google News
ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான மொத்த ஓட்டில், 50 சதவீதத்துக்கு மேல், தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ் பெற்றுள்ளார்.

ஈரோடு லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., - நாம் தமிழர் கட்சி உட்பட, 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த ஓட்டான, 15.38 லட்சத்தில், 10 லட்சத்து, 94,366 ஓட்டுகள் பதிவானது. அதில், தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ், 5 லட்சத்து, 62,339 ஓட்டுக்களை பெற்றார். இது, 51.43 சதவீதமாகும்.

ஆனால், இதே தொகுதியில், கடந்த, 2019ல் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி, 5 லட்சத்து, 63,591 ஓட்டுகள் பெற்றிருந்தார். அதை ஒப்பிடுகையில், 1,252 ஓட்டுகள் குறைவாகவே தி.மு.க., பெற்றுள்ளது.

அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், 3 லட்சத்து, 25,773 ஓட்டுகள் பெற்றுள்ளார். இது, 29.79 சதவீதமாகும்.

இதே தொகுதியில் கடந்த, 2019 ல் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மணிமாறன், 3 லட்சத்து, 52,973 ஓட்டுகள் பெற்றிருந்தார். அப்போது அ.தி.மு.க., ஆளும் கட்சியாகவும், பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தது. தற்போது, ஆற்றல் அசோக்குமார் இதைவிட, 27,200 ஓட்டுகள் குறைவாகவே பெற்றுள்ளார்.

ஈரோடு தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சி வேட்பாளர்கள் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் ஒற்றை இலக்கத்தில் ஓட்டு சதவீதத்தை பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன், 82,796 ஓட்டு பெற்று, 7.57 சதவீதம் பெற்றார்.

த.மா.கா. வேட்பாளர் விஜயகுமார், 77,911 ஓட்டுகள் பெற்று, 7.13 சதவீதம் பெற்றார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைவரும், ஒற்றை இலக்கத்துக்கு கீழே ஓட்டு சதவீதத்தை பெற்றுள்ளனர்.

####டெபாசிட் காலி####

ஈரோடு தொகுதியில், 10.94 லட்சம் ஓட்டுகள் பதிவானது. தி.மு.க., வேட்பாளர் கே.இ.பிரகாஷ், 5 லட்சத்து, 62,339 ஓட்டுக்களை பெற்று வென்றார். அடுத்து, 2ம் இடத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் - 3 லட்சத்து, 25,775 ஓட்டும், 3ம் இடத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் - 82,796 ஓட்டும், 4ம் இடத்தில் த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார் - 77,911 ஓட்டும் பெற்றனர். மற்ற வேட்பாளர்கள் மிகக்குறைந்த ஓட்டுகளே பெற்றனர்.

மொத்த ஓட்டுப்பதிவில், 6 ல் ஒரு பங்கு ஓட்டுக்களை பெற்றவர்களே, தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகையை பெற இயலும். அந்த வகையில், 1.82 லட்சம் ஓட்டுக்களை பெற்றால் மட்டுமே, டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியும். இதன்படி அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற இயலும். நாம் தமிழர், த.மா.கா., உட்பட, 29 வேட்பாளர்களும் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.

###நோட்டோவுக்கும் கீழ் ###

ஈரோடு லோக்சபா தொகுதியில், நோட்டோ - 13,983 ஓட்டுகளை பெற்றது.

இத்தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க.,- அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.மா.கா., வேட்பாளர்களுக்கு அடுத்து நோட்டா 13, 983 ஓட்டுகள் பெற்றுள்ளது. அதற்கடுத்த, 27 வேட்பாளர்களும் நோட்டோவுக்கும் குறைவான ஓட்டுக்களையே பெற்றனர்.

ஒட்டு மொத்த, 31 வேட்பாளர்களில் சுயேட்டையாக போட்டியிட்ட கே.செந்தில்குமார், 178 ஓட்டுக்களை பெற்று, மிகக்குறைந்த ஓட்டுக்களை பெற்ற வேட்பாளராக உள்ளார்.

###த.மா.கா.,வும் ஈரோடு மேற்கும்###

ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., கூட்டணி த.மா.கா., வேட்பாளருக்கு ஈரோடு மேற்கு தொகுதி, 31,313 ஓட்டுக்களை வழங்கி பலம் சேர்த்தது.

ஈரோடு லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., சார்பில் பி.விஜயகுமார் போட்டியிட்டார். இத்தொகுதிக்கு உட்பட்ட மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி பா.ஜ., வசமும், ஈரோடு கிழக்கு, மேற்கு, காங்கேயம், தாராபுரம் ஆகிய, 4 தொகுதிகள் தி.மு.க. கூட்டணி வசமும், குமாரபாளையம் அ.தி.மு.க., வசமும் உள்ளது.

பா.ஜ., மற்றும் த.மா.கா.,வுக்கு இத்தொகுதியில் செல்வாக்கு இல்லை என கூறப்பட்ட நிலையில், சட்டசபை தொகுதி வாரியாக குமாரபாளையம் - 5,634 ஓட்டுகள், ஈரோடு கிழக்கு - 12,784, ஈரோடு மேற்கு - 31,313, மொடக்குறிச்சி - 13,699, தாராபுரம் - 14,012, காங்கேயம் - 10,844 என மொத்தம், 77,911 ஓட்டுக்களை, த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார் பெற்றார்.

தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சிக்கு அடுத்தபடியாக, 4ம் இடத்தை இவர் பெற்றுள்ளார். பா.ஜ., எம்.எல்.ஏ.,வான சி.கே.சரஸ்வதி வசமுள்ள மொடக்குறிச்சியைவிட, ஈரோடு மேற்கு இவருக்கு அதிகமாக கை கொடுத்து, 31,313 ஓட்டை பெற்று தந்ததால், கவுரவமான ஓட்டை பெற்றுள்ளனர். மொடக்குறிச்சியில், 13,699 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us