பெண்கள் பொங்கி எழுந்தால் ஆட்சி இருக்காது; சிவ்ராஜ் சிங் சவுகான்
பெண்கள் பொங்கி எழுந்தால் ஆட்சி இருக்காது; சிவ்ராஜ் சிங் சவுகான்
பெண்கள் பொங்கி எழுந்தால் ஆட்சி இருக்காது; சிவ்ராஜ் சிங் சவுகான்
UPDATED : ஜூலை 07, 2024 12:50 AM
ADDED : ஜூலை 06, 2024 11:32 PM

“நாட்டு மக்களுக்கு தாகம் தணிக்கும் தண்ணீரை, 'ஜல் ஜீவன்' திட்டம் வாயிலாக, பிரதமர் மோடி வழங்கி வருகிறார்; ஆனால், முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு மதுவை கொடுத்து வருகிறார். அவர், மக்களுக்கான முதல்வர் அல்ல,” என, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
சென்னை வானகரம், தனியார் மண்டபத்தில் தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உட்பட, 3,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
![]() |
போதை கலாசாரம்
கூட்டத்தில் மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது:
பா.ஜ., ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் உட்பட நாடு முழுதும் புதிய நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசாக்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் போதை கலாசாரம் தலைதுாக்கியுள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது:
தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., 3.62 சதவீத ஓட்டுகளை தான் பெற்றது. கடந்த தேர்தலில், 11.24 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இந்த ஓட்டு சதவீத அதிகரிப்பு, பா.ஜ.,வுக்கு எளிதாக கிடைக்கவில்லை.
தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 33.50ல் இருந்து, 26.90 ஆக குறைந்துள்ளது. தென் மாநிலங்களில் பா.ஜ., வளர்ச்சி அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.
பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை பார்லிமென்டில் நிறுவியுள்ளார். ஆனால், தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.,யான சு.வெங்கடேசன், அதை கிண்டல் செய்கிறார். வரும், 2026ல் தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் செங்கோல் சட்டசபையில் நிறுவப்படும்.
தி.மு.க., ஆட்சியில் போதை பொருள் கலாசாரம், ஊழல், சட்ட விரோத பண பரிமாற்றம் அதிகரித்துள்ளது. நாட்டு மக்களுக்கு தாகம் தணிக்கும் தண்ணீரை, ஜல் ஜீவன் திட்டம் வாயிலாக, பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.
![]() |
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 65 பேர் உயிரிழந்த மரண தாண்டவத்தை சமீபத்தில் தமிழகம் சந்தித்துள்ளது. தமிழகத்தில், இளைஞர்கள் சக்தியை வீணடித்து வருகின்றனர்.
போதையால் பொதுமக்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்; குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
தி.மு.க., அரசுக்கு எதிராக, பா.ஜ., மகளிரணியினர் களத்தில் இறங்கி போராட வேண்டும். பெண்கள் பொங்கி எழுந்தால், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம்.
தமிழகத்தில் விவசாயமே பிரதான தொழில். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.
தமிழக மக்களின் தாய் மாமனாக நான் இருப்பேன். மக்களும், விவசாயிகளும் எது வேண்டுமானாலும் என்னிடம் உரிமையோடு கேட்கலாம். அதை செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்.
500 நாட்கள்
அண்ணாமலை பேசியதாவது:
பா.ஜ.,வில் இருப்பவர்களிடம் நல்ல உழைப்பு, சித்தாந்தம், நேர்மை உள்ளது. லோக்சபா தேர்தலில் கடுமையாக உழைத்தோம். அதன் பலனாக, பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தோம். அதேபோன்று, 2026 சட்டசபை தேர்தலுக்காக அடுத்த, 500 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
-நமது நிருபர்-
லோக்சபா தேர்தலில், பல, 'பூத்'களில் இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்துள்ளோம். முதலிடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை கேட்டு, அதற்கு தீர்வு காண வேண்டும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம், ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இன்று, எட்டு மாணவர்களில் ஒருவருக்கு தான் அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்கிறது. ஆனால், 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக, தி.மு.க.,வினர் பொய் சொல்கின்றனர்.
டாஸ்மாக் மது விற்பனையை, ஆண்டுதோறும் அதிகரிப்பது தான் தமிழக அரசின் ஒரே இலக்காக இருந்து வருகிறது. மதுக்கடைகள் எண்ணிக்கையை விட, ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தமிழக அரசின் கடன், 2026ல் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். தமிழகத்தில் எந்த நேரத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
அதற்கு முன்னதாக, தமிழக பா.ஜ.,வினர் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நடத்தியிருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ., சார்பில், 25,000 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.
பயிர் நன்கு விளைச்சலை தர வேண்டும் என்றால், அகலமாகவும், ஆழமாகவும் உழவு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று, விவசாயிகள் கூறுவர். நாம் லோக்சபா தேர்தலில் அகலமாக உழுது விட்டோம்.
சட்டசபை தேர்தலில் ஆழமாக உழவு பணி செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, 'ஈகோ' இல்லாமல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்.