லோக்சபா தேர்தலில் தோல்வி ஏன் கட்சியினரிடம் கருத்து கேட்கும் பா.ஜ.,
லோக்சபா தேர்தலில் தோல்வி ஏன் கட்சியினரிடம் கருத்து கேட்கும் பா.ஜ.,
லோக்சபா தேர்தலில் தோல்வி ஏன் கட்சியினரிடம் கருத்து கேட்கும் பா.ஜ.,
ADDED : ஜூன் 20, 2024 02:57 AM
சென்னை:தமிழக பா.ஜ., மையக் குழு கூட்டம் சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது. அதில் மத்திய அமைச்சர் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ம.க., வேட்பாளர் வெற்றிக்கு பணிக் குழு அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மையக் குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., 19 தொகுதிகளிலும், அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நான்கு பேரும் போட்டியிட்டனர். மீதி கட்சிகள் சொந்த சின்னங்களில் போட்டியிட்டன; ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
தோல்விக்கான காரணம் குறித்து அண்ணாமலை தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளார். அதன்படி கமலாலயத்தில் காலையில் ஒரு தொகுதி, மதியம் ஒரு தொகுதி வாரியாக 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினரை வரவழைத்து பேச உள்ளார். தேர்தல் பணியில் சரிவர ஈடுபடாத நிர்வாகிகள் யார்? தேர்தல் செலவில் முறைகேடு செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது.
கட்சி நிர்வாகிகள் அனைவரையும் தனித்தனியே பேசவிட்டு அவர்கள் கருத்துகளை முழுமையாக கேட்பது என அண்ணாமலை முடிவெடுத்துள்ளார். அப்படி பேசும்போது நிர்வாகிகள் யார் மீது வேண்டுமானாலும் என்ன குற்றச்சாட்டுகளையும் சொல்லலாம்; ஆதாரங்களுடன் சொல்ல வேண்டும். அப்படி ஆதாரங்களுடன் சொல்லும்போது அது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்வது என அண்ணாமலை முடிவெடுத்திருக்கிறார்.
குறிப்பாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்காக கட்சி தலைமை அனுப்பிய செலவுத் தொகை, முழுமையாக செலவழிக்கப்படாமல் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கைகளில் தேங்கியது. அது குறித்தே முக்கியமாக விசாரிக்க முடிவெடுத்துள்ளார் அண்ணாமலை.
இப்படி சேகரிக்கப்படும் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார். இந்த விஷயங்கள் குறித்தே கட்சியின் மையக் குழு கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மையக் குழு கூட்டத்துக்குப் பின், கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை அளித்த பேட்டி:
ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க நம்பிக்கை அளிக்கக்கூடியதாக 'நீட்' தேர்வு உள்ளது. இதை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். நிர்வாக ரீதியாக சில குளறுபடி நடந்துள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனாலேயே நீட் தேர்வை எதிர்க்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த நிர்வாகி எச்.ராஜா கூறுகையில், ''தமிழக அரசிடம் நீதிபதி சந்துரு சமர்ப்பித்த அறிக்கையில் நெற்றியில் திலகம் வைக்கக்கூடாது என்ற பரிந்துரை உள்ளது; இது பெரும்பான்மை மதத்திற்கு எதிரானது. அந்த அறிக்கையின் பரிந்துரைகள் உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்'' என்றார்.