பா.ஜ., அமைப்பு பொதுச் செயலர்களாக திருமணம் ஆனவர்களையும் நியமிக்க முடிவு
பா.ஜ., அமைப்பு பொதுச் செயலர்களாக திருமணம் ஆனவர்களையும் நியமிக்க முடிவு
பா.ஜ., அமைப்பு பொதுச் செயலர்களாக திருமணம் ஆனவர்களையும் நியமிக்க முடிவு
ADDED : ஜூன் 20, 2024 02:56 AM
சென்னை:பா.ஜ., அமைப்பு பொதுச் செயலர்களாக ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர் அல்லாத திருமணம் ஆனவர்களையும் நியமிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.,வில் தேசிய, மாநில அளவில் அமைப்பு பொதுச்செயலர் பதவி உள்ளது. தேசிய அமைப்பு பொதுச்செயலர் பதவி தேசியத் தலைவருக்கும், மாநில அமைப்பு பொதுச்செயலர் பதவி மாநில தலைவர்களுக்கும் இணையான அதிகாரம் கொண்டது.
கட்சி அலுவலகங்கள், நிதி விவகாரம், அறக்கட்டளைகள், கட்சியின் அசையும், அசையா சொத்துகள் அமைப்பு பொதுச்செயலர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர் மட்டுமே இப்பொறுப்புக்கு வர முடியும்.
கட்சியின் எந்த முடிவையும் அமைப்பு பொதுச்செயலரிடம் ஆலோசிக்காமல் எடுக்க முடியாது. தற்போது பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலராக பி.எல்.சந்தோஷ், இணை அமைப்பு பொதுச்செயலராக சிவ்பிரகாஷ், தமிழக அமைப்பு பொதுச்செயலராக கேசவ விநாயகன் ஆகியோர் உள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. உ.பி., மகாராஷ்டிராவில் பெரும் தோல்வியும், ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நாடகா, ஹரியானாவில் சரிவும் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்யவும், துடிப்பான, அமைப்பு பணிகளில் அனுபவமும், சாதுர்யமும் கொண்டவர்களை அமைப்பு பொதுச்செயலர்காக நியமிக்கவும் பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா மத்திய அமைச்சராகியுள்ளதால் வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்ததும் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன்பின் கட்சியில் சீரமைப்பு பணிகள் வேகமாக துவங்கும் என கூறப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் 30 மாநில அமைப்பு பொதுச்செயலர்கள் உள்ளனர். உ.பி., மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களை அமைப்பு பொதுச்செயலர்களாக நியமிக்கவும் பா.ஜ., முடிவு செய்துள்ளது.
அமைப்பு பொதுச்செயலர்களாக ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களை மட்டுமே நியமிக்கும் வழக்கம் உள்ளதால் தேவைப்படும் இடங்களுக்கு நியமிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர் அல்லாத கட்சி அமைப்பு பணிகள், அரசியல் வியூகம் அமைப்பதில் திறமை மிக்கவர்களையும் முழுநேரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்புள்ளவர்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் அவர்களை அமைப்பு பொதுச்செயலர்களாக நியமிக்கவும் பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளதாகவும் புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்பட்டதும் அதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.