அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக சட்டசபை கூட்டம்
அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக சட்டசபை கூட்டம்
அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக சட்டசபை கூட்டம்
UPDATED : ஜூன் 12, 2024 04:56 AM
ADDED : ஜூன் 12, 2024 12:57 AM

சென்னை:தமிழக சட்டசபை கூட்டத் தொடர், வரும் 24ம் தேதிக்கு பதிலாக, முன்கூட்டியே, 20ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 19ல் தாக்கல் செய்யப்பட்டது.
மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடத்தி முடிக்கப்பட்டு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் காரணமாக, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் நிறைவடைந்த நிலையில், வரும் 24ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் துவங்கும் என, கடந்த 7ம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்தது.
ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், சட்டசபை கூட்டத் தொடரை, முன்னதாகவே ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வரும் 24ம் தேதிக்கு பதிலாக, 20ம் தேதி காலை 10:00 மணிக்கு சட்டசபை கூடும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துஉள்ளார்.
எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தை கூட்டுவது, ஒவ்வொரு நாளும் எந்த துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, இன்று பகல் 12:00 மணிக்கு, சபாநாயகர் தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட், இன்று எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கிறார்.
அவருக்கு சபாநாயகர் அப்பாவு, தலைமைச் செயலகத்தில், அவரது அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.